சனி, 9 டிசம்பர், 2017

மனைவிதான் சொர்க்கம்.!

                            தன்னை மறந்து ஊஞ்சல் ஆடுகிற அந்த அழகி மணமானவளா, திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவளா,காதலை மனதில் இருத்தி  அவன்  வருகையை எதிர்பார்த்து  ஆடுகிறவளா...யாருக்குத் தெரியும்? ஒருவேளை  மணமானவளாக  இருப்பின் முந்தைய இரவின் ஊடலில் தொடங்கி உடல்  கலந்த அந்த இனிய நிகழ்வை நினைத்து ஆடுகிறாளோ? இருக்கலாம்!!
                        ராஜா ரவிவர்மாவின் அந்த ஓவியம் பார்த்தபின் ரத்த நாளங்களில்  அலைகள்.!மலர்ந்தும் மலராத மலரைப் போல தெரிகிற கச்சை அணியா  மார்பு, காற்றின் வேகத்தில் உடலுடன் ஒட்டிவிட்ட மெல்லிய சேலை, தொடைகளின் செழுமை, அடடா...அற்புதமான கனவுடன்தான்  தூரிகையும் தொட்டு ஆனந்தம் பெற்றிருக்கிறது,!  ஓவிய ராஜாவை நகல் எடுக்க எவரும் இல்லையோ ....எனது சிற்றறிவுக்கு தெரிந்தவரை  ஓவிய திலகம் மாதவனை சொல்லமுடிகிறது. சிறந்தவர்கள் இருக்கலாம்.அவர்களது படைப்புகளைப் பார்க்காமல் ஒப்பீடு செய்வது பிழைதான்!
                  ஆனாலும் ஊஞ்சல் அழகியின் ஒய்யாரம்,திமிர் என சொன்னாலும் குற்றம் இல்லை, நம்மை வெகுவாக பாதிக்கிறது.இவ்வளவு நீளமுள்ள அடர்த்தியான கூந்தலை இன்றைய பெண்களிடம் காணமுடியாது. கூந்தலை  படுக்கையாக பயன்படுத்தி கணவனுடன் உறவு கொண்டபின்னர் தலை குளிப்பது மற்றவர்களுக்கு அடையாளம் உணர்வதற்காகத்தானோ! ஞாயிறு இரவு முடிந்து கதிரவன் உதிப்பதற்கு முன்னதாகவே இன்றைய இல்லத்தரசிகள் தலை குளித்துவிட்டு வந்தால் சக பெண்களின் கிண்டலுக்கு  ஆளாவதை பார்த்திருக்கலாம்.
                சிற்றின்பம்தான் பேரின்பம்.! அது சொர்க்கத்தில் இல்லை. சொர்க்கமே  பெண்கள்தான்! மனைவியை  இழந்த கணவனும், கணவனை இழந்த பெண்களும் வாழ்வதுதான் நரகம்.! சிற்றின்பம் தீயது என்று யாருடைய மனமும் சொல்வதில்லை! ஆன்மீகம் சொல்கிறது என்பது அவர்களது இயலாமையினால் இருக்கலாம்!
                    ஆலயங்களில், திருத்தேர்களில் சிற்றின்ப படைப்புகள் இன்றும்  காணப்படுகிறதே....!
                   செத்தபின்னர் மண்ணோடு மண்ணாகவோ,மாறப்போகிற உடம்புக்கு சிவலோகம் என்ன,வைகுண்டம் என்ன..?
                 வாழும்போதே பேரின்பம் பெருகட்டும்! சொர்க்கமே மனைவிதான்!

கருத்துகள் இல்லை: