செவ்வாய், 30 ஜனவரி, 2018

சீறும் பாம்பாக ஜீனத் அமன்.

பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவளை கட்டாயப் படுத்தி ஒரு ஆண் அவளை வன்புணர்வு கொள்ள முடியும்.இச்சையைத் தணித்துக் கொள்வான். பணம் கொடுத்து பரத்தையிடம் சுகம் பெறுகிற ஆண்களையும்   பெரும்பாலும் சட்டம் தொடுவதில்லை.பெண்ணைத்தான் குற்றவாளியென கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கித்தருவார்கள்.

வன்புணர்வு கொண்ட அவனுக்கு மட்டுமே சுகம்.

ஆணுக்கு வயகரா வாங்கி கொடுத்து அவனுடன் மூன்று பெண்கள் வல்லுறவு   கொண்டிருக்கிறார்கள்.ஆண்களை கற்பழிப்பது என்பது மனரீதியாக  சாத்தியம் இல்லை என்றாலும் எப்படியோ அது டில்லி தலைநகரில் நடந்திருக்கிறது.

மும்பையில் ஒரு சம்பவம்.

'தம் மாரோ தம்" என பாடி ஆடி இளசுகளையும் பெருசுகளையும் கலங்கடித்தவர்  ஜீனத் அமன்.

நெருங்கிப் பழகி வந்த ஒருவரே தன்னை பாலியல் ரீதியாக தொல்லைகள்  தருவதாக போலீசில் புகார் செய்திருக்கிறார்.

இந்த வயதானவரையா வன்புணர்வு செய்வான் என எண்ணினார்களோ என்னவோ போலீஸ் தயங்க,

ஜீனத் விடுவதாக இல்லை. மேலிடம் வரை செல்வேன் என நிர்பந்திக்க  வேறு வழியின்றி வழக்கு பதிவாகி இருக்கிறது.

திங்கள், 29 ஜனவரி, 2018

ராஜா ..பாக்யராஜா! காதல் ராஜா!

என்னால் இன்றளவும் பாக்யராஜ்-பிரவீணா காதல் வாழ்க்கையை மறக்க இயலவில்லை.

பாக்யராஜுடன் சில நடிகைகளை இணைத்து வழக்கம் போல கிசு கிசுக்கள்  வந்தாலும் அதில் உண்மை இருந்ததில்லை. அவர் காஞ்சி ஓட்டலில் தங்கியிருந்தபோது நானே அவரிடம்  கேட்டிருக்கிறேன் 'காதலைப் பற்றி!'

"இல்லிங்க மணி..அதெல்லாம் கற்பனை"என மறுத்திருக்கிறார். அவர்  பிரவீணாவை காதலிப்பது எனக்கு நன்றாகத் தெரியும்.அந்த காலத்தில் நடிகர்கள்,நடிகைகளின் வீடுகளுக்குச்சென்று அவர்களுடன்  பத்திரிகையாளர்கள் மனம் விட்டுப் பேசுவது உண்டு.அவர்களின் இல்லங்களில் உணவு கொள்வதும் இயல்பு.இந்த காலத்தைப் போல நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அன்று  இருந்ததில்லை.நட்சத்திரங்களும்  தங்களில் ஒருவரைப்  போலவே நடத்துவார்கள்.ஆனால் இந்த காலத்தில்?

 ஏளனப் பார்வை எக்களாமிடும்.போனில் பேசுவதற்கு கூட பி.ஆர்.ஒ.அனுமதி  தேவைப்படும்.இத்தகைய இழிவுக்கு சில பத்திரிகையாளர்களும் காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.சரி விஷயத்துக்கு வருகிறேன். 

 முறுகல்தோசை பிரவீணாவின் வீட்டில் மிகவும் ருசியாக இருக்கும். நெய் விட்டு இளம் முறுகலாக சுட்டுத் தருவார்கள்.தோசைக்கு சரியான இணையாக  ஆந்திர கார சட்னி.இதற்காகவே அங்கு செல்வேன்.

பிரவீணாவை  கல்யாணம் செய்து வைப்பதில் பாக்யராஜின் வீட்டாருக்கு விருப்பமில்லை என்பதை சொல்லி என்னிடம் வருந்தியிருக்கிறார்.1980-களில் பிரவீணாவுடைய பெருங்கவலையே திருமணம்தான்!ராஜனும் (பாக்யராஜை அப்படித்தான்அழைப்பேன்.) பிரவீணாவை  கல்யாணம் செய்வதில் மிகவும் உறுதியுடன் இருந்தார்.

நான் நினைத்ததைப் போல திடீரென ஒரு நாள் நெருங்கிய நட்புகளுடன் திருப்பதிக்குச் சென்று தெய்வ சந்நிதியில் பிரவீணாவை கரம் பற்றிவிட்டார். வீட்டாரின் கோபத்தை எப்படியும் தனித்து விட முடியும் என்கிற நம்பிக்கை

"நினைச்சதை சாதிச்சிட்டான்யா..கெட்டிக்காரன் .நல்லா வருவான் பாரு" என்பார் ராஜனின் குருநாதர் பாரதிராஜா.

கணவரை 'ராஜா" என அன்பொழுக அழைப்பார் பிரவீணா. 'ஆர் ' என்ற எழுத்துடன் ராஜனின் விரலில் இன்றும் மின்னும் அந்த மோதிரம் அவர்  அணிவித்ததுதான்!

மூன்று ஆண்டுகள் கூட அவர்களால்  முழுமையாக வாழ முடியவில்லை .பிரவீணாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை அதிகம்.ஆனால் மஞ்சள் காமாலைக்கு பலியானார் பிரவீணா!

ராஜன் கதறி அழுதது.... பல நாட்கள் ஆகியும் சரியாக உணவு உட்கொள்ளாதது இன்றும் எனது மனதைப் பிசைகிறது. இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

முழுமையாக ஒரு புத்தகம் எழுதிவருகிறேன்.அதில் சொல்வேன் நிறைய!

இந்தப்  பதிவின்  படத்தில்  இருப்பவர்  பாக்யராஜின் பாட்டி. பூர்ணிமாவை  திருமணம் செய்வதற்காக  எனை வைத்து ராஜன் போட்ட  சிறு  நாடகம். 


சனி, 27 ஜனவரி, 2018

நடிகை டாப்சியை டம்மி ஆக்கிய ஹீரோ!

 அரசியல்வாதிகளைப் போல பித்தலாட்டம் பண்ணுகிறவர்கள், நம்ப வைத்துக் கழுத்தை அறுக்கிறவர்கள் திரை உலகிலும் இருக்கிறார்கள்.

             வாய்ப்புக் கேட்டு வருகிறவர்கள் பலவீனமானவர்களாக இருந்து விட்டால் "வர்றியா பெட் ரூமுக்கு"என்று கூப்பிடுவதற்கு கூச்சப்பட மாட்டார்கள். ஒரு காலத்தில் " பெட்ரூம் லைட் அணைஞ்சால் தான் செட் லைட் எரியும் " என்பதாக சொல்வார்கள்.அந்த கிழிந்த கந்தல் துணி இன்றும் அடிக்கடி கொடியாக ஏற்றப்படுகிறது. சற்று தைரியமான நடிகைகள்  பகிரங்கமாக சொல்லி சந்திக்கு இழுப்பதும் நடக்கவே செய்கிறது.

         ஒருவழியாக டாப்சியின் மார்க்கெட் கோலிவுட்டில் அவுட். அவ்வப்போது  அக்கட தேசமான ஆந்திரத்தில் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தார்.
தற்போது அதுவும் இல்லை. பட்சி பாலிவுட் பக்கமாக பறந்து விட்டது.

               "டாப்சிக்கு என்ன நடந்தது?"----அவரே சொல்கிறார்.

   "ஹீரோவை விட ஹீரோயின் என்ன அவ்வளவு பெரிய ஆளா என்கிற மனப்பான்மை டோலிவுட்டில் சில கதாநாயகர்கள், தயாரிப்பாளர்களுக்கு  இருக்கிறது.அது எனக்கு பிடிக்கவில்லை.
         நான் நடிக்கிற படத்தில் என்னை கேட்காமலேயே ,எனக்கு சொல்லாமலேயே என்னுடைய அறிமுக சீனை மாற்றி விட்டார்கள். நான்  செட்டுக்குள் நுழையும்போதும் சொல்லவில்லை. போன பிறகுதான்  மாற்றம் தெரிந்தது.
      ஏன் இந்த மாற்றம்? கேட்டேன்.
     "டைரக்டரும் ஹீரோவும் மாத்த சொன்னாங்க. ஹீரோ கேரக்டரை விட உங்க கேரக்டரும் அறிமுக சீனும் சூப்பரா இருக்காம்.அதான் குறைக்க சொல்லிட்டாங்க" என்றார்.

    அதனால் எனக்கு மரியாதை கொடுக்கிற டைரக்டர்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் மட்டுமே நடப்பதாக முடிவு செய்திருக்கிறேன்"
       நல்ல முடிவுதான்!

 

நடிகர் செந்தில் கிறித்துவம் தழுவினாரா?

உண்டு கொழுத்த நரி ஒவ்வோர் வீட்டுக் கோழியையும் விட்டு விடக்கூடாது என்பதில் அக்கறையாக இருப்பதைப் பற்றிய கவலை தமிழர்க்கு சற்றும் இல்லை.

தாயின் முந்தானையை பற்றி இழுத்து விட்டான் ஒரு பரதேசி என்கிற செய்தியைக் கேட்ட பின்னரும் ''விடுய்யா ! அவனே பரதேசி! என்ன பண்ணச்சொல்ற? முந்தானையோடு விட்டுட்டான்ல.உடம்ப தொடல்லல."என  வியாக்கியானம் சொல்கிறவர்கள்தான் அதிகம்.! ஒருத்தனுக்கும் ரத்தம் கொதிக்கவில்லை. ரத்தத்தில் அணுக்களுக்குப் பதில்  புழுக்கள் !

இதைப்பற்றிய கவலை இல்லாமல் 'செந்தில் கிறித்தவரா,இந்துவா 'என்கிற  ஆராய்ச்சியில் சிலர் இறங்கி இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் என்கிற பெயரில் சிலர் மிரட்டிப் பணம் பெறுவதும், தவறான செய்திகளை பதிவிடுவதும் அதிகமாகி வருகிறது.செந்திலையும் கவுண்டமணியையும் அவ்வப்போது சாகடிக்கிறார்கள். தவறாக செய்தியை கூசாமல் பதிவிடும்  இவர்களுக்கு மத மாற்றல் வதந்திக்கு லவுட் ஸ்பீக்கர் கட்டுவது என்ன அவ்வளவு கஷ்டமா?

" மதம் மாறிட்டிங்களா செந்தில்?" என்றதும் கஷ்டமுடன்  சிரித்தபடியே "என்னண்ணே...நீங்க கூட இப்படி கேக்கலாமாண்ணே...சங்கடமா இருக்குண்ணே...! என்னைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்க நீங்க! போங்கண்ணே" என்று முகத்தை திருப்பிக்கேட்டுக் கொண்டார்.

அவருடைய நண்பர் குமரி முத்து மரண தருவாயில் கேட்டுக்கொண்டார்  என்பதற்காக இரண்டு கூட்டங்களுக்கு 'நடிகராக' சென்று பேசியதை திரித்து செய்தியாக்கி இருக்கிறார்கள். 

போங்கடா!
 

 

வியாழன், 25 ஜனவரி, 2018

தாய் முலைப்பால் அருந்தி வளர்ந்தவனா நீ?

                  "பொருப்பிலே பிறந்து தென்னன்
                              புகழிலே கிடந்து சங்கத்து
                 இருப்பிலே இருந்து வைகை
                              ஏட்டிலே தவழ்ந்த பேதை
                நெருப்பிலே  நின்று கற்றோர்
                              நினைவிலே நடந்தோர் என
               மருப்பிலே பயின்ற பாவை
                            மருங்கிலே வளருகின்றாள்"--என்கிறது வில்லி பாரதச் சிறப்புப் பாயிரம்.தமிழ் மொழியின் சிறப்பு எத்தகையது என்பதைஅறிவுடையோர் அறிவர்.ஆந்தையும் குயிலும் வானத்தில் பறந்தாலும்  ஆந்தை இருளிலும் குயில் பகலிலும் தான் வாழும்.அதைப்போலவே தமிழை  குயிலுக்கு ஒப்பிடலாம்.சமஸ்கிருதம் வழக்கொழிந்த மொழி என்பதால் அதனது  வாழ்விடம் இருள்தான்!
        
                 ஆந்தையைப் போன்ற மனிதர்களும் உயர்ந்த இடத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகப் போர்வைக்குள் மறைந்து வாழும் சாத்தான்களுக்கு தாயைப்பற்றி என தெரியும்? தாய் மொழி வாழ்த்தின் சிறப்புப்பற்றி என புரியும்? 

            தாய் முலைப்பால் அருந்தி வளர்ந்தவனாக இருந்திருந்தால்   தடித்த தேகம் நாணி நச்சருந்தி இருக்கவேண்டாமா? தமிழ்த் தாய் வாழ்த்துக்கு வணங்குவது தாயை வணங்குவதற்கு ஒப்பாகும் என்பது கூட தெரியாதவன்  உண்மையான சைவத்தில் இருக்க முடியாது. தேவாரம் திருவாசகம் தெரியாதவன் எப்படி சிவனுக்கு தொண்டு செய்ய முடியும்.?

      விஜயேந்திரன் என்கிற காஞ்சி மடத்தின் 'சின்ன' மடாதிபதி வருத்தம் தெரிவிப்பதே அவருக்கு மரியாதை.

அண்ணா, எம்.ஜி.ஆர்.,ஜெயா சமாதிகளை அகற்று!

                     தமிழக அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு கெட்ட கனவு  இவர்தான்! பெயர் டிராபிக் ராமசாமி! இரண்டு சட்டைப்பைகளிலும்  மனுக்கள் துருத்திக் கொண்டிருக்கும். திடமான நெஞ்சு.அச்சமில்லாத  கண்கள். மிகவும் எளிமையான மனிதர். எண்பத்திரண்டு வயது இளைஞர்.



             'அச்சமில்லை, அச்சமில்லை ' படத்தின் முன்னோட்ட காட்சி, பாடல் இசை வெளியீட்டு விழாவுக்கு இயக்குநர் அமீர் இவரையும்  அழைத்திருந்தார். கார்ட்டூனிஸ்ட் பாலா, மாணவி வளர்மதி,சுப.உதயகுமார் போன்ற  'தீவிரவாதிகள்' கலந்து கொண்டதால் மத்திய மாநில உளவுத்துறை ஒற்றர்களும் அலையாவிருந்தினர்களாக, கண்கொத்திப்பாம்புகளாக அலைந்ததை பார்க்க நேர்ந்தது.

       சோசியல் மீடியாக்கள் அன்று காலையில்தான் டிராபிக்  ராமசாமி சீரியஸ் என கதை விட்டிருந்தன .ஆனால் அவரோ திடகாத்திரமாக நின்றபடியே பேசுகிறார். விட்டால் மணிக்கணக்கில் பேசுவார் போல!

        மைக்கை பிடித்த மனிதர் இடிகளை அடுத்தடுத்து இறக்கியபடியே இருக்க மொத்தக்கூட்டமும் அவ்வப்போது ஆரவாரித்தது..

              "இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்னாடியே  தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடந்துவிடும்!கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்! பெத்த அம்மாவைக்கூட உருகி உருகி கூப்பிட்டிருக்க மாட்டானுக.அப்படி கூப்பிட்டானுக அம்மா அம்மான்னு!.எதுக்கு?

          கொள்ளை அடிக்க!

மதுரை அணையில தக்கைய மிதக்க விட்டாரே ஒரு மந்திரி, மதுரை முழுக்க  ஜெயலலிதாவின் பிளக்ஸ் வெச்சிருந்தார். போட்டேன் கேசை! மெரட்டி பார்த்தானுக.பயப்படல.எதுக்காக பயப்படனும்? கடற்கரையில இருக்கிற மூணு சமாதிகளையும் தூக்கனும்னு  சொல்லி கேஸ் போடப்போறேன். என்னை தலைகீழா தொங்க விட்டு அடிச்சு கொல்லப்பார்த்தானுக. என் சாவு கடவுள்  கையில இருக்கு.

       கொலகாரப்பயல்களுக்கு எதிராகமக்கள் வாயை திறக்க பயப்படுறாங்க! ஏன்னு புரியல.நான் இருக்கேன் .தைரியமா பேசுங்க.நான் ராஜாஜியின் ஆளு.அவரோட மந்திரிக்கு இரண்டு வருஷம் பி.ஏ.வாக இருந்திருக்கேன்.

      கவர்னருக்கு என்ன வேலை? குப்பைய கூட்டுறதா? பக்கத்தில இரண்டு பெண்களை நிற்க வெச்சுக்கிட்டு போஸ் கொடுக்கிறார்.

 முப்பத்திரெண்டு  திருடர்கள் கொள்ளை அடிச்சிட்டு இருக்காங்க. அங்க போய் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் நாலு இந்தியாவை காப்பாத்தலாம். அவ்வளவு பணம் இருக்கு.!

      ரஜினியின் கல்யாண  மண்டபத்துக்கு முன்பு ஒருதடவை போயிருக்கேன். முகப்பில 'கடமையை செய்.பலனை எதிர்பார்"னு இருந்தது.அன்னிக்கி வெளியேறியவன்தான் அதுக்குப் பிறகு போகவே இல்லை.இது என்ன கீதை? திரைத்துறையில் திறமையா இரு! அரசியலுக்கு வந்து  தமிழ்நாட்டு மக்களை ஏமாத்தனும்னு நெனச்சா முடிவு மோசமா இருக்கும்!

      எச்.ராஜான்னு ஒரு ஏமாத்துப் பேர்வழி இருக்கார். இவர்தான் இந்து மதத்தை காப்பாத்த வந்தவர் மாதிரி பேசுவார். தமிழ்நாட்டு ரோட்டில் எழுபத்தி மூவாயிரம் இந்து  கோவில் இருக்கு.சாமி படத்தை வெச்சு சம்பாதிக்கப் பார்க்கிறானுங்க. அத்தனை கோவிலையும் எடுக்க சொல்லி கேஸ் போட்டிருக்கேன்."

         இப்படி பிட்டு பிட்டாக பேசி கலங்கடித்தார் டிராபிக் ராமசாமி!  

       

அன்பே ஆருயிரே, அமுதே...!

என்ன பேறு பெற்றேன் உன் மடி சாய!
உச்சந்தலையில் பனி
வெம்மையாய் மாறி 
உனக்குள் கலக்கிறது!
அருவியாய் இறங்கி
அடிமடிக்குள்
அடிமையாய் !
 காலமெல்லாம்
கிடந்தேன்.!
முதுகு தண்டு வழியாக
இறங்கியது  எனது
உயிர் மூச்சு !


"கண்ணா!"
அழைத்தது நீயா?
என்னுள் புகுந்தவளுக்கு
எப்படி பேச்சு வந்தது?
மூச்சு முட்ட
முத்திட்டபோதே
உனக்குள் நான்
எனக்குள் நீ
கரைந்த பின்னர் வார்த்தை ஏது?
"ஆன்மாவும்
பேசும்!"

 

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

அண்ணாவுக்கும் வைத்த செல்லூர் ஆப்பு.!!!!!!!!!!!!!

எப்படிப்பட்ட அறிவாளிகளை ஜெயலலிதா கண்டறிந்திருக்கிறார் ! இதற்காகவே அவருக்கு நோபல் கிடைத்திருக்க வேண்டும். பாவம் காலி பண்ணி விட்டார்கள்..தமிழகத்துக்கு பேரிழப்பு!

      "குற்றால அருவிக்கு வழி அமைத்தவர்களே நாங்கள்தான்" என எவரேனும்  சொன்னால் அவர்களை என்ன செய்வீர்கள்?"

      "நாசாவுக்கு ஐடியா சப்ளையே அடியேன்தான் " என யாரேனும் சொன்னால்  அத்தகையோருக்கு எந்த பெயரை தேர்வு செய்வீர்கள்?"

        "அய்யா அப்துல் கலாமே எங்களிடம்தான் கன்சல்ட் பண்ணுவார் " என்பவரை எங்கு அனுப்பலாம்?

          ஏர்வாடியா ,கீழ்ப்பாக்கமா?

இத்தகைய பேரறிவாளர்கள் நமக்கு அமைச்சர்கள் என்றால் அது நமது  விதியா ,அல்லது சாபமா?

     எழுத்துலக வித்தகர், திராவிடத்துப் போர்வாள் , சிந்திக்கும் சிற்பிகளை  கழகத்துக்கு தந்த அறிஞர் பெருமகனார், ஆற்றல் அரசை யாத்தவர் , காஞ்சி தந்த அண்ணன் அண்ணாவை இந்த பூவுலகமே அறியும் .அந்த அண்ணனுக்கு  "அடையாளம் கொடுத்ததே அதிமுகதான். நாங்கள் இல்லையென்றால் அவரை யாருக்கும் தெரியாது" என்று ஒரு மந்திரியே  நாக்கு மீது பல் போட்டு சொல்கிறார்  என்றால் இது தமிழ்நாடுதானா?

      இதை கேட்டுக்கொண்டு புல் பூண்டாக வாழ்கிறோமே நாமும் தமிழர் தானா?

       செல்லூர் ராசுவே நீவிர் வாழ்க. நின் நுண்ணறிவு வளர்க!

     எத்தகைய ஆய்வாளர்கள்.!
   
      

திங்கள், 15 ஜனவரி, 2018

நடிகையின் அறச்சீற்றம் .

        எல்லா நடிகைகளும் இப்படி பொங்க மாட்டார்களா என்கிற ஆதங்கம்  வரவே செய்கிறது. எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் ஆண் ஆதிக்கம் என்பது உச்சத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

      பாலியல் சீண்டல் பற்றி பகிரங்கமாக சொன்னவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.யாராக இருந்தாலும் கதாநாயக நடிகர்களை அனுசரித்தே செல்ல வேண்டியதிருக்கிறது.அது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

    இத்தகைய சூழலில்தான் நடிகை சோனம் கபூரிடம் சில பத்திரிகையாளர்கள் கல்யாண சாப்பாடு எப்போது என்று கேட்க குமுறி இருக்கிறார்.

"முக்கியமான நடிகைகளிடம் மட்டுமே இப்படி கேட்கிறீர்களே ,போய் ரன்வீர் சிங்.ரந்தீர்  கபூர், ஆகியோரிடம் கேட்கவேண்டியதுதானே? என்னுடைய பெர்சனல் மேட்டர்சில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை"என்று விளாசிவிட்டார்.

தங்கர்பச்சானும் எச்.ராசாவும் என்ன சொல்கிறார்கள்?

எப்போதும் குறை சொல்பவர்களை ஆங்கிலத்தில் 'நாட்டரிங் நபாப்ஸ் ஆப் நெகட்டிவ்ஸ்ம்' என அழைப்பார்கள்.தமிழகத்தில் இத்தகையவர்களுக்கு பற்றாக்குறை என்பது எக்காலத்திலும் இருந்ததில்லை.

இங்கே அறிவுரை அல்லது ஆலோசனை சொல்வதாக நினைத்து  உளருகிறவனுக்கு 'அரசியல் வித்தகன்' என பெயர் சூட்டிவிடுகிற  ஊடகங்களுக்கும் பஞ்சம் இல்லை.  இத்தகைய பின்னணியில்தான் அரசியல் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

 திராவிடம் என்றால் என்ன என்பதற்கு இரு வரலாற்றாசிரியர்கள் குறு விளக்கம் தந்திருக்கிறார்கள்.ஒருவர் இயக்குநர் தங்கர் பச்சான். மெய்யாகவே இன மான உணர்வாளர். 'திராவிடம் என்பது ஒரு சொல்' என்பதாக சொல்லி இருக்கிறார். உண்மைதான் 'தமிழன் 'என்பதையும் அவர் ஒரு சொல்லாகவே  பார்த்து வருகிறார் என்பதை நமக்குப் புரிய வைத்திருக்கிறார்.

ஆனால் இன்னொருவரான எச்.ராசாவை அப்படி ஒதுக்கி வைத்து விட  இயலாது. இந்தியத் துணைக்கண்டத்தை தனது ஆளுகைக்குள் வைத்திருக்கிற பிஜேபியில் பொறுப்பில் இருக்கிற புண்ணியமூர்த்தி .இவர் சொல்கிறார்  'திராவிடம் என்பது ஒரு இடத்தைக் குறிக்கும்' .

முன்னவரை விட பின்னவர் எந்த அளவுக்கு அறிவாளி என்பதை நீங்களே  முடிவு செய்து கொள்ளுங்கள்.  வசவு மொழியும் இவரது வாய்க்கு அஞ்சும்.


"திராவிட மொழிக் குடும்பத்தைச்சேர்ந்த மொழியொன்றை தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும்"என்பதாக திராவிடத்துக்கு மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்கள்  வல்லுநர்கள்.

திராவிடத்தின் இன்னொரு பெயர் தமிழ்.அதுஎப்படி உருப்பெற்றது என்பதற்கு நெடிய விளக்கம் தரவேண்டியதாக இருக்கும்.

ராசாவுக்கு மற்றொரு தகவலையும் சொல்ல விரும்புகிறேன்.

குஜராத் அகழாய்வில் காணப்பட்ட எழுத்துகள் பிராமி .அது திராவிட மொழிகளின் விரிவுதான் என்கிறது ஆராய்ச்சி.ஆக சிந்து சமவெளி நாகரீகம் கண்ட தமிழ் இனம் உலகின் மூத்த இனம்.ஆரியம் என்பது கணவாய் வழி வந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தெரியாத விஷயங்களில் தலையிட வேண்டாம் இருவரும். 


ஞாயிறு, 14 ஜனவரி, 2018

கழுத்தளவு அசிங்கத்தில்.....

          இயக்குநர் கோபி நைனாரின் 'அறம்'படத்தை இன்று மறுமுறையும் பார்க்கும் வாய்ப்பு. அகன்ற திரையில் பார்க்கும் அனுபவம் வேறு.குறும் பெட்டியில் பார்த்த அனுபவம் வேறு.
         ஆனால் அதே உணர்வு.
        அச்சம்,அழுகை ,இரக்கம், ஆட்சியாளர் மீதான ஆத்திரம்  சற்றும் குறைய வில்லை.அரசியல்வாதிகளின் மீதான கோபம் புரட்சியாக மாறி விடுமோ,அது   தடை உடைக்கும் படையாகிவிடுமோ என்கிற எண்ணம் இரத்தமுடன் கலக்கிறது." ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் எப்படி சார்  சேவை செய்ய முடியும் ?" என்கிற கோபியின் எழுத்து  மனதை கீறுகிறது.
        எப்படிப்பட்ட அரசியல் நம்மைச் சூழ்ந்திருக்கிறது?
"வரும் காலத்தில் ஜனநாயகம் இருக்குமா?" என்கிற அச்சம் உச்ச நீதிமன்ற  நீதிபதிகளுக்கு வந்திருக்கிறது என்றால்.....?
       சர்வாதிகாரத்தின் நிழல் நம் மீது படிகிறது என்றுதானே அர்த்தம்.
       கருத்துச் சொல்ல முடியவில்லை.உண்மைகளைச் சொல்ல முடிய வில்லை.  சொன்னால் அச்சுறுத்தல். இதற்கு அதிகார வர்க்கமும் துணை .
        இதுதான் நவீன இந்தியாவா?
        கமல்ஹாசன் சொன்னதைப் போல "கழுத்தளவு அசிங்கம் சூழ்ந்து  இருக்கிறது"
         "கணுக்கால் கூட நனையக்கூடாது என்று நினைத்தவர்கள்தான் நாங்கள். எங்களை சமூக அவலங்கள் அரசியலுக்கு  கொண்டு வந்து விட்டது.அசிங்கங்களை  அகற்ற தமிழர்கள்  ஒன்று  சேர்ந்து செயல்பட வேண்டும்" என்று கமல் சொன்னதை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை.


சனி, 13 ஜனவரி, 2018

அதிமுக அறக்கட்டளை சொத்து சசியின் கையில்!

          அன்பு நிறை வலைப்பூ சகோதர,சகோதரிகளுக்கு இந்த  எளியவனின்   இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு இணைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..
         இனி ,
        மூணு அங்குல உயர காதுக்கு நாலு முழப் பூவை சுற்றி இருக்கிறார்கள் என்கிற உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. சக்களத்தி  சண்டை கூட தோற்றுப் போகும்,!அந்த அளவுக்கு ஓபிஎஸ்--இபிஎஸ் அணியினர் தினகரன் மீதும் சசிகலா மீதும் குற்றச்சாட்டுகளை வீசினார்கள். பதிலுக்கு தினகரனும் அள்ளி வீசினார். ஜெயலலிதாவின் சாவில்  மர்மம் இருப்பதாகச் சொல்லி  விசாரணைக் கமிஷன் கேட்டார்கள்.அதுவும் வந்தாச்சு.
        "மூன்றே மாதத்தில் எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்புவேன்" என வீர வசனம் பேசி தினகரனும் சட்டசபைக்குள் போய் விட்டார்.
          ஆனால் இரண்டு பேரும் பாஜகவை ஏமாற்றுவதற்காக போட்ட நாடகமாக இருக்குமோ என்கிற சந்தேகம் நமக்கு வந்திருக்கிறது. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக அறக்கட்டளை  தற்போது யாரிடம் இருக்கிறது?
          சசிகலா குடும்பத்தினர் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
          இது எப்படி நிகழ்ந்தது?
          நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த காலத்தில்  சசிகலா பரோலில் அவரை சந்திக்க வந்திருந்தார்.அந்த இடைப்பட்ட நாட்களில் மாற்றப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
       அமைச்சர்கள்,ஐஏஎஸ் அதிகாரிகள்,துணையின்றி இது நடந்திருக்க  வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
           இத்தகைய செய்தியை ஒரு தமிழ் இணையம் வெளியிட்டிருக்கிறது.
பகிரங்கமாக மோதிக் கொள்கிறவர்கள் அதிமுக அறக்கட்டளை மாற்றம் பற்றி  வாயைத் திறக்கவில்லையே ,ஏன்?
        "எடப்பாடியை  வீட்டுக்கு அனுப்புவேன்" என்று சொன்ன தினகரன் தற்போது அத்தகைய கேள்வியைக் கேட்டாலே கடந்து சென்று விடுகிறார்.ஏன்?
        ஏமாற்றுகிறார்கள் .ஏமாற்றுகிறார்கள்.!  

ஆறாயிரம் கோடி சசி பினாமிகள் சொத்து?

                   மேழம் முடிந்து சுறவம் பிறக்கும் முதல் நாளில்...! தமிழரின் புத்தாண்டு புன்னகையுடன் மலரும் நாளுக்காகக் காத்திருந்த  இனிமையான  நேரத்தில் ஓர் ஆங்கில இணையத்தில்படிக்கிறவாய்ப்பு.....!
                அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளும் வலிமையை தரும்படி  தமிழ் வேதத்தின்  ஆசான் திருவள்ளுவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
              அப்படி என்ன அதிர்ச்சி...'அம்மா என அன்பொழுக அழைக்கப்பட்ட  ஜெயலலிதாவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டு சிறைப் பறவையாகி ' தண்டனை பெற்ற சம்பவத்தை விடவா அதிர்ச்சி ஏற்படப்போகிறது?அவ்வளவு நல்லவங்களையே யாரோ  போட்டுத் தள்ளி இருக்கிறார்கள் என்று சொந்த கட்சிக்காரர்களே குற்றம் சாட்டி குற்றவாளிகளை கமிஷன் வைத்து தேடி வருகிறார்களே அதை விட வேறு  அதிர்ச்சி என்ன இருக்க முடியும்?
                கடந்த மாதங்களில்  சசிகலா தொடர்பான  நிறுவனங்கள் என கருதப்பட்ட இடங்களில் வருமான வரித் துறை கை வைத்து நடத்திய சோதனைகளில் ஆறாயிரம் கோடிக்கு பினாமி சொத்துக்களை அடையாளம்  கண்டு இருக்கிறார்கள்.ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாங்கப்பட்ட சொத்துகளுக்கு டாக்குமென்ட்ஸ் இல்லையாம்.
             என்னடா கொடுமை ?
             எந்த பதவியிலும் இல்லை. உயிர்த் தோழி என்கிற ஒற்றை உறவு மட்டுமே முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன்.! இதை வைத்துக்கொண்டு  ஆயிரக்கணக்கில் கோடிகளை சுருட்டமுடிகிறது என்றால் ....
           பதவியில் இருந்தவர்கள் எவ்வளவு சுருட்டி இருப்பார்கள்?
          சந்தேகம் வருகிறதா இல்லையா?
          சட்ட மீறல்களையும், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களையும்  கண்காணிக்கவேண்டிய அதிகாரம் வைத்திருக்கிற மத்திய அரசும், உளவுத்துறையும் செய்தது என்ன?
          கண்டுபிடித்து வைத்துக்கொண்டு கார்னர் செய்வதற்கு நேரத்தை எதிர்பார்க்கிறாங்களா ?
           எல்லாம் சரி கையில் இருக்கும் ஆதாரங்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்?
            அதற்கு பேரம் நடக்குமோ என்னவோ? குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிக்கு  தனிச்சலுகைகள் திருட்டுத் தனமாக வழங்கப்படுவதற்கு பேரங்கள் தானே!

வெள்ளி, 12 ஜனவரி, 2018

எச்.ராசாவுக்கு .....

சிலர் அறிவினால் பதவி பெறுவர். சிலர் பரிந்துரையால் பெறுவர். திறமை  இருப்பின் தேடி வருவதும் உண்டு. ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள பதவி  எதனால் வந்தது என்பது உங்களுக்குத்தான் தெரியும்.அதை நீங்கள் சொன்னால் மக்களுக்குப் புரியும்.
நிற்க,
ஒருவர் கருத்துச் சொல்கிற போது அடுத்தவர் இப்படி சொல்லி இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவது வழக்கம். அது பிழை எனக் கருதினால் அதை  சுட்டிக்காட்டுவது கண்ணியம்.அதை விடுத்து தரம் தாழ்ந்து விமர்சிப்பின்  சுட்டிக்காட்டுபவர்களே பிழையானவர்கள் என்றாகி விடும்.  குக்கலிடம் இருந்து குயிலின் குரலை எதிர்பார்க்க முடியாது என்று மக்கள் நினைத்து விடுவார்கள்.
உங்களுக்கு வரலாறு தெரியுமா?
"தெரியும்.சொல்லு?" என்பதாக சொன்னால், சற்றுப் பின்நோக்கிப் பாருங்கள்.
தேவதாசி , பரத்தையர் என்பது சுமேரியாவில் இருந்து இங்கு வந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.கி.மு.3500-க்கு முன்னர் சுமேரியர்களிடம் இந்த வழக்கம் இருந்ததாம்.ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒருபெண்ணை கடவுளுக்கு அர்ப்பணிப்பார்களாம்.
இப்பெண்களுக்குத் தலைவி யார் தெரியுமா?
மன்னரின் மகளே! இவளை 'பதேசி' என அழைப்பார்கள்.
இப்பழக்கம் கி.மு.1900-ல் இந்திய வேதப் பண்பாட்டில் கலந்திருக்கவேண்டும்  என வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.
எகிப்திய நாகரீகத்திலும் பெண்கள் அர்ச்சனை செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்திய வேதப் பண்பாட்டின் கீழே பெண்களின் பங்கு கட்டுப்பட்டிருந்ததால் அவர்களால் அர்ச்சகர்கள் ஆக முடியவில்லை. சதுர்வர்ணம் என்கிற கொடுவாள்  அவர்களை தெய்வ சேவை செய்வதற்கு என ஒதுக்கிவிட்டது.
சதுர்வர்ணத்தின் மறுபெயரே  'இந்துத்வா '.
அதன் பெயரால்தான் கவிப்பேரரசு வைரமுத்துவை இழித்துப் பேச உம்மால் முடிந்திருக்கிறது.
 இது தமிழ்நாடு.கண்ணியமாக நடப்பவர்களை மதிக்கும்,மறுப்பவர்களை உமிழும்.மீறுபவர்களை மிதிக்கும்.

வியாழன், 11 ஜனவரி, 2018

தமிழுக்கு இந்து மதம் என்ன கொடுத்தது?

           மிருகங்களுக்கு மதம் பிடிக்கும்.ஆனால் எந்த சமயமும் சார்ந்து  இருப்பதில்லை. அவைகளுக்கு ஐந்தறிவுதான் என்கிறார்கள்.ஆனால்  ஆறறிவு  இருப்பதாக சொல்லப்படும் மனிதர்களுக்கு மதம் பிடிக்கும். 'மதமும்' பிடிக்கும்.
         சங்க காலத்தில் சைவமும் சமணமும் மோதின.சமணர்கள்  மதுரையில் கழுவேற்றப்பட்டார்கள்.சில நேரங்களில் மன்னர்களும் சமணம் சார்ந்தும் சைவம் சார்ந்தும் செயல்பட்டார்கள். சமயம் சார்ந்துதான் வாதப் பிரதிவாதம்   நிகழ்ந்தன.
       'நான் இந்து," என எவரும் வாதிட்டதில்லை.
      மோதல்கள் நிகழ்ந்தாலும் தமிழ் மொழிக்கு சிறப்பும் பெருமையும்தான்  சேர்ந்தன. ஐம்பெரும் காப்பியங்களை  சமணமும் புத்தமும்தான் தமிழுக்குத் தந்தன.
        சமயம் என்பதை இந்து என்கிற மதம் ஆட்கொண்டபின்னர் தமிழுக்கு  இலக்கியம் என்பது அன்னியமாகி வருகிறது.
       இந்து என்கிற மதம் இருந்ததா?
      "இந்து என்கிற சொல் சிந்து என்கிற சம்ஸ்கிருத சொல்லிலிருந்து  பாரசீக மொழி  வழியாக உருவான சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன் முதலாக  பாரசீகத்தினரால் ஒரு புவி இயல் சொல்லாக, சிந்து நதியின் கிழக்குப் பக்கம் வசிக்கும் அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன் படுத்தப் பட்டது.ஒரு மதத்தைக் குறிக்காமல் ஓர் இடத்தைக் குறிப்பதாகவே  இருந்தது.
      இதற்கு இன்றைய இந்து தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
      சங்கராச்சாரியார்கள் ,சாயிபாபாக்கள்,ஜக்கி போன்ற புதிய கடவுள்களும் சாமியார்களும் வந்த பிறகு தமிழுக்கு கிடைத்த இலக்கியப் பெருமைகள் என்னென்ன?
    பிஜேபியின் நாவுக்கரசர் எச்.ராஜாவின் பேச்சு,ஏச்சுகளை இலக்கியம் என சொல்ல முடியுமா? தமிழிசை என பெயர் வைக்கப்பட்டதைத் தவிர  அந்த அம்மையார் தனது சொத்துகளை விரிவாக்கிய அளவுக்கு பெயருக்குப் பெருமை சேர்க்கும்வகையில் தமிழுக்குஎன்ன தந்திருக்கிறார்?
   சிந்திக்க,

புதன், 10 ஜனவரி, 2018

முட்டாள்களின் சொர்க்கத்தில் ராஜா!

         "நாம்தான் ராஜ வம்சமாச்சே" என்கிற திமிருடன் இருந்த ராஜா ஒரு நாள்  செத்துப் போனான்.
         இந்து மத நம்பிக்கையின்படி அவனை எமனது தூதர்கள் பிடித்துக் கொண்டு  போனார்கள்.
         " எனக்கு சொர்க்கலோகம்தானே?" -போகிற வழியிலேயே கேட்டான்  ராஜா.
          "இது பூலோகம் இல்லை.தர்மம் தவறாத மன்னர் எமதர்மர் ஆள்கிற புதிய லோகம்.உனக்குரிய தண்டனையை எம் மன்னர் தருவார்" என்றார்கள் எமதூதர்கள்.
           "அதற்கென்ன ,எனக்கு சொர்க்கம் கன்பர்ம்" என்றான்.
           தூதர்கள் சிரித்துக் கொண்டனர்.
           சித்திரகுப்தன் ஏடு எடுத்துப் படித்தான். எமன் அதை  கேட்டுக்கொண்டான். தீர்ப்பை சொன்னான்.
            "ராஜாவை நரகத்தில் தள்ளாதே. முட்டாள்களின் சொர்க்கத்தில் தள்ளிவிடு! ராஜாவுக்கு உரிய தகுதி இல்லாமல் பூலோகத்தை கெடுத்து வைத்திருக்கிறான்.படித்தறிவும் இல்லை.பட்டறிவும் இல்லை. பகுத்தறிவாளர்கள் வாழ்ந்த பூமியில் சாபக்கேடாக ஜனித்தவன்.இவனை  பொய்யர்களும் போலிகளும் வாழ்கிற முட்டாள்களுக்குரிய சொர்க்கத்திலேயே கடைசி வகுப்பில் தள்ளிவிடு" என உத்தரவிட்டான்.
          அதிர்ந்துபோனான் ராஜா.
          "மாண்புமிகு எமதர்மரே, நான் அப்பீல் செய்ய வேண்டும்"?
          "இங்கு யாம் இட்டதே சட்டம்.இறுதியானது.மறுபரிசீலனைக்கு  வழி இல்லை. சொந்த நாட்டில் தாய் மொழியை அந்நிய மொழிக்கு அடகு வைப்பதற்கு துணை போனவன்தானே  நீ! உனக்கு முட்டாள்களின் சொர்க்கம்தான் தகுதியானது .இழுத்துச்செல்லுங்கள் இவனை!"
 
        

செவ்வாய், 9 ஜனவரி, 2018

ஜெயகுமாருக்கு வேட்டு வைக்கிறார் மதுசூதனன்!

     "ஆரம்பமாகிவிட்டதடி அரூபத்தின் வேலைகள்" என்று மனோகராவில் வசனம் வரும். வசந்தசேனைக்கு எதிராக முதல் கணவர் அரூபமாக வந்து  அச்சுறுத்துவார்.
     அந்த அரூபமாக ஜெயலலிதா வந்து விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.! தெரிந்தோ, தெரியாமலோ " அம்மா ஆவியாக வந்து பழி வாங்குவார் " என அதிமுக கோஷ்டிகளில் ஏதோ ஒரு கோஷ்டி சொன்னது  நினைவுக்கு வருகிறது.
   ஒன்றுபட்ட இரட்டை இலை ஆர்.கே.நகரில் கிழிந்து மதிப்பிழந்து போனதற்கு அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
  "ஒரு வாரத்தில் அமைச்சர் ஜெயகுமாரை கூப்பிட்டு விசாரித்து நடவடிக்கை எடுங்கள்" என்று தோற்றுப்போன அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனன்  முதல்வர் எடப்பாடிக்கும் துணை முதல்வர்  ஓபிஎஸ் சுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.
   இதை எப்படி எடுத்துக்கொள்வது?
"உள்ளடி வேலைகள் நடந்திருக்கிறது."
"அதனால்தான் கட்சி வேட்பாளர் தோற்றார்."
"தோல்விக்குக் காரணம் அமைச்சர் ஜெயகுமார்தான்!அதனால் நடவடிக்கை எடுக்கவேண்டும்!"
"இல்லாவிட்டால் மறுபடியும் தர்ம யுத்தம் நடக்கும்"---இப்படி எத்தனையோ  வகையாக மக்கள் யோசிக்க ஆரம்பிப்பார்களா மாட்டார்களா?
கட்சிக்குள் ரகசியமாக நடக்கவேண்டிய விசாரணையை இப்படி பகிரங்கமாக  நடத்துவதற்கு என்ன காரணம்?
சமாதியில் தியானம் பண்ணவேண்டியது இருக்கிறது.
தர்மயுத்தம்  தற்காலிகமாகவே ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
மறுபடியும் சங்கு ஊதி அதை ஆரம்பிக்கவேண்டியதிருக்கிறது.
இப்படி எல்லாம் நினைக்கத்தோன்றுகிறது.


கலவி முடியாக் காமம்.காதலர்க்கு யோகா உடலுறவு!

              'கண்ணதாசன் கவிதைகள்' புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.

             முத்தொள்ளாயிரம் பாடலொன்றுக்கு எழுதி இருந்த அவரது விளக்க உரை மயக்கிவிட்டது. மது அருந்தாமலேயே கிறங்கிவிட்டேன். என்னைப் போல தனியனாக தவிக்கும்  எத்தனையோ பேர்கள் மது அருந்துவதற்கு இதுவும் ஒரு காரணமோ?
            துணையை இழந்த ஒற்றையர்களுக்கு கவிதைதானே  தேசிய கீதம்.

             "கையகம் தொட்டும் மெய்யகம் தொட்டும்
              கட்டிப் பிடித்துக் கையோடு கையை
              இட்டுப் பிணைத்தும் ஈந்தனன் முத்தம்!
              முத்தம் கொண்டதால் மூண்டது காமம்!
              கட்டுக்காளை கன்னியின் உடலைத்
              தொட்டாற் காமம் தோன்றா  தாசொல்?"

      ரஜனீஸ் முரட்டுப் பெரியாராக  தெரிந்தார். ஓஷோவின் தத்துவங்கள் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் மனிதனின் மனம் சார்ந்தே  பேசும்  என்பது எனக்கு இன்றுதான் புரிகிறது. நேற்றுவரை அவரை செக்ஸ் சாமியாராகவே நினைத்திருந்தேன்.



     அவர் சொல்வார்: "காதலர்களுக்கான யோகா என்பது எளிதான முறைதான்! முழுமையான உடலுறவின் புனிதத் தன்மையை அனுபவிக்க வேண்டும். எல்லா மதங்களும்  செக்சை ஒரு பாவச்செயலாகவே சித்தரித்து உடலுறவின் புனிதத் தன்மையை அழித்து விட்டன" என்கிறார் .

  நீங்கள் காமம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? துறவிகளும் இல்லறம் சார்ந்துதானே வாழ்ந்திருக்கிறார்கள்.

     காமம் என்பது தவம் இருந்து பெறுகிற வரம் இல்லை. கவசக் குண்டலம்  கர்ணனுக்கு எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு காமமும்! காமம் உடலுடன் சேர்ந்தே பிறந்து வளர்கிறது. மனிதனுக்கு சாதியை ஓட்ட வைத்தவர்களால் காமத்துக்கு சாதி, மதத்தை ஒட்ட முடியவில்லை.காமம்  எனக்கும் இருக்கிறது.என் வீட்டு எலிக்கும் இருக்கிறது.

   ஆனால் ராணி தேனீக்கு உடலுறவு என்பது அதன் வாழ்வில் ஒரே ஒரு  முறைதான்! பரிதாபமாக இல்லையா!  பரிதாபம்தான்! உடலுறவு கொண்டதும் உறுப்பு ஒடிந்து ராணீ தேனீயின் உடம்பில் தங்கி விடுகிறது. ஆண் ஈ மடிந்து போகிறது. இத்தகைய வாழ்க்கை மனிதனுக்கு அமைந்திருந்தால்?

      நினைத்துப் பார்க்கவே ......!
     

    

       

திங்கள், 8 ஜனவரி, 2018

ஜெயலலிதா இறந்தது 4 -ம் தேதியா,5-ம் தேதியா?

     அக்குளுக்குள் ஆப்பிளை மறைத்து வைக்க முடிகிறபோது  பரங்கிக்  காயை மறைக்கமுடியாதா என கணக்குப் போட்டார்களோ என்னவோ , ஓகி புயல் மாதிரி ஆகி விட்டது சசி-அப்பலோ கூட்டணி. 

      நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பொன்னையன் அளித்த பேட்டி  ஜெயாவின் உண்மை ஆதரவாளர்களை அதிரடித்திருக்கும்  நிலையில் இன்று விகடன் இணைய தளத்தில் எரிமலை வெடித்திருக்கிறது.

      டாக்டர் சுதா சேஷய்யனின் பேட்டி எத்தகைய கயமைத்தனம் நிகழ்ந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

           'ஜெயலலிதா  11.30 மணிக்கு இறந்தார் ' என அப்போலோ அறிவித்தது. அரசும் சேர்ந்துதான் அறிவிப்பை வெளியிட்டது. 

              ஆனால் டாக்டர் சுதா சேஷைய்யன் இன்று அளித்திருக்கும் பேட்டியில் என்ன சொன்னதாக இணைய தளம் சொல்கிறது?

           "5-ம் தேதி  இரவு 10.30 மணி அளவில்  ( நன்றாக கவனியுங்கள்.) எனக்கு போன் வந்தது. ஜெயலலிதா உடல் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு 'எம்பாமிங்' செய்ய வேண்டும் என்று. நான்  இரவு 11.4௦ மணி  அளவில் அப்போலோ சென்று விட்டேன். 12.20 மணிக்கு எம்பாமிங் செய்யப்பட்டது" என்று சொல்லி இருக்கிறார்.

       டிச.4-ம் தேதி மாலை நான்கு மணிக்கு ஜெ.இறந்தார் என தீபக் கூறுகிறார்.

        என்ன குழப்பமாக இருக்கிறதா?

        மருத்துவமனைக்கு ஜெ.கொண்டுவரப்பட்டபோதே அறுபது சத விகிதம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவ மனை குறிப்புகள் சொல்வதாக முன்னரே பொன்னையன் சொல்லி இருக்கிறார். ஆக அந்த அளவுக்கு  ஜெ. உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு யார் காரணம்? 

         சசிகலாவா? கண்டு பிடியுங்கள்.

        ஜெ.நடைப்பிணமாக போயஸ்கார்டனில் வாழ்ந்ததாகத்தானே நினைக்க வேண்டியதிருக்கிறது?         

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஆணிக்கட்டையால் ஜெயலலிதாவை அடித்தது யார்?

 வெள்ளம் ஓடி வற்றிய பின்னர் ஆற்றில் சில அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கும்.சுனாமியின் வடுக்கள் மனங்களில் இன்னும் அழியாத ரணமாக ,ஆற்றமுடியாத அழுகையாக ஒவ்வோர் ஆண்டும் வெடித்துச் சிதறுவதைப் போல, ஜெயலலிதா செத்து ஓராண்டு கடந்தும் மர்மங்கள் வாய் பிளக்கின்றன.

              புதைக்குழிக்குள் கிடக்கும்போதே அதிர வைக்கின்ற செய்திகள். புதைகுழியை தொண்டினால்....அம்மம்மோ.!

              பிணமாக ஜெயலிதா கிடத்தப்பட்டபோது மீடியாக்களின் பூதக்கண்ணாடி கண்களுக்கு மூன்று புள்ளிகள்..ஜெயாவின் கன்னத்தில் பதிந்து கிடந்ததை  கவனித்து சந்தேகத்தை எழுப்பின. 'எம்பார்ம்' செய்த தடயம் என அப்போது யாரோ சொல்லி வாயை அடைத்தனர்.

                ஆனால் முன்னாள் அமைச்சர் பொன்னையன் இதயங்களை நொறுங்கிப்போகும் செய்தியை சொல்லியிருக்கிறார். 
               ஆணிக்கட்டையால் ஜெயலலிதாவின் கன்னத்தில் அடித்த காயம்தான் அது என்கிறார்.சொல்பவர் யாரோ ஒருவர் அல்லர். இன்னோவா காருக்காக தனது  தமிழாற்றலை  அடகு வைத்த  வணிகரும் அல்லர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரது நன்மதிப்பைப் பெற்றவர்.

                காலம் கடந்து சொல்லியிருக்கிறார்.சாதாரணமான குற்றச்சாட்டாக மத்திய அரசும் தமிழக அரசும் கருதி கை கழுவ முடியாது. சிபிஐ தானாகவே முன் வந்து வழக்குப்பதிவு செய்து பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தியாக வேண்டும். டி.ஏன்.ஏ.சோதனை நடத்தி வாரிசு சிக்கலையும் தீர்த்து வைத்தாக வேண்டும்.

      கையெழுத்துப் போட மறுத்ததால் அடித்திருக்கிறார்களா? 

     சசிகலாவைத் தவிர வேறு யார் யார் மீது சந்தேகம் இருக்கிறதோ அவர்களை எல்லாம் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வாருங்கள்.

வெள்ளி, 5 ஜனவரி, 2018

ரஜினி,கமல் ,விஷால் அரசியல்.சூர்யா வரவேற்பு.

ஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் சூர்யா , தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா , கீர்த்தி சுரேஷ் ,, ரம்யா கிருஷ்ணன் ,தம்பி ராமையா , சுரேஷ் மேனன் , இயக்குநர் விக்னேஷ் சிவன் , ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் , கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் சூர்யா பேசியது :- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து  அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. இப்போது விக்னேஷ் சிவன் கூறியது போன்று எப்படி எனக்கு ஓவ்வொரு டைரக்டர் முக்கியமோ அதை போலவே என்னுடைய வாழ்கைக்கு ஓவ்வொரு தயாரிப்பாளரும்  முக்கியமோ அதில் பணிபுரிந்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் முக்கியம். இதை போல ஒரு 35 , 36 படங்களில் நிறைய நல்ல படங்களை கொடுக்க முடிந்துள்ளது என்று தைரியமாக சொல்ல முடியும். அதற்கு பல தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள் காரணமாக இருந்துள்ளனர். ரசிகர்கள் நிச்சயமாக முக்கிய காரணமாக இருந்துள்ளனர். ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார். எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் இந்த கூட்டணி இணைந்தது. விக்னேஷ் சிவனை சந்திக்க போவதாக ஹரி சாரிடம் கூறினேன் அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ணவேண்டும் என்று அவர் கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார்கள். 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஓரு பாதையில் கதை செல்கின்றது. முதல் சந்திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது. உடன் பணிபுரிந்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். படத்தில் உள்ள அணைத்து பாடல் மிக சிறப்பாக அமைத்துள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற Disclaimer card எங்கள் படத்தில் வராது அப்படி ஓரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் என்றார் சூர்யா.

புதன், 3 ஜனவரி, 2018

ரஜினியின் அவசரக்கோலம்.இரவல் கொள்கைகள்.

        "ஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, நாணயமான, அரசியல்.இது எந்த சாதி மத சார்பும் இல்லாத அறம் சார்ந்த அரசியல் ஆகும்" என்பதாக விரிவுரை தந்திருக்கிறார் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் திரு. ரஜினிகாந்த்.

     மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கி இருக்கிற,அழுத்தமுடன்  சொல்லி உள்ள உண்மை, நேர்மை, நாணயம்,மத சார்பற்ற  அறம் பற்றிதான் இவர்  சொல்லி இருக்கிறார்.

      ஆனால் "ஆன்மீகம் என்பது அரசியலில் இல்லை. அது ஆன்மா சார்ந்தது. அது நம்மை பற்றியது  " என்கிறார்கள். இவரோ அரசியலில் ஆன்மீகத்தை  புகுத்தப்பார்க்கிறார்.இவரது அரசியல்  பிரவேச அறிவிப்பு மிகவும் திறமையாக  திட்டமிட்டு  நகர்த்தப்பட்டிருக்கிறது.ஆனால் அவசரக் கோலம்! அதனால்தான்  "உண்மை ,உழைப்பு, உயர்வு" முழக்கத்தைக்கூட சரவணா ஸ்டோர்சில்
இருந்துஎடுத்திருக்கிறார்கள். வரிசை மாறாமல் பயன் படுத்தி இருப்பதுதான் சிறப்பு! மன்ற லோகோவுக்கு ராமகிருஷ்ண மடம்உதவி இருக்கிறது
 .லோகோவை சுற்றியுள்ள பாம்புக்கு "மறுபிறவி,மாற்றம், குணமடைதல், ஒழுக்கம்" என மடம்  விளக்கம் சொல்கிறது.இந்துமதம்  சார்ந்தது ராம கிருஷ்ண மடம்.

இங்கு பிரதமர் மோடி சென்று ஆசி பெற்றிருக்கிறார். பாம்புக்காக ரஜினியும்  சென்று திரும்பி இருக்கிறார்.அவரது லோகோவில்  வெள்ளைத்தாமரை மீது பாபா பட  'அபன வாயு' முத்திரைதான் இருந்தது.

 ஆனால்  " பிஜேபியின் பிராஞ்சுதான் ரஜினி ஆரம்பிக்க இருக்கிற கட்சி" என்கிற கருத்து  கடுமையாக சுற்றுலா செய்த பின்னர் தாமரை காணாமல் போய்விட்டது. எடுத்து விட்டார். ஆக எல்லாமே அவசரம், குழப்பம் என்றுதான் நடந்திருக்கிறது. 'யாருடைய நிர்பந்தமோ ' தெரியவில்லை. அன்றாட நாட்டு நிகழ்வுகளை அலசுவதுதான் அரசியல்வாதியின் கடமை.அதை ட்விட்டர் வழியாக செய்தவர் கமல்ஹாசன். ஆனால் மூன்று ஆண்டுகள் வரை யாரும் அவர் உள்பட கருத்து சொல்லக்கூடாது என்றால் அது எந்த வகையான  மக்கள்  சேவை ?

இதுநாள் வரை தமிழக மக்களுக்காக என்னென்ன உதவிகள் செய்திருக்கிறார், அவரது மனைவி லதா அம்மை நடத்துகிற பள்ளியில், ட்ரஸ்ட்நடத்துகிற திருமண மண்டபத்தில் எத்தனை ஏழைகளுக்கு இடம் கொடுத்திருகிறார்? எத்தனை பிரச்னைகளுக்குபோராடி இருக்கிறார்? ஈழ மக்களை கொன்று குவித்தபோது இவர் என்ன செய்தார்? இப்படி ஆயிரம் கேள்விகள்!

  விஜய்காந்துக்கு இருக்கிற தைரியம் ரஜினிக்கு இல்லை. சட்ட சபையில் ஜெயலலிதாவையே எதிர்த்து தைரியமுடன் பேசியவர் விஜயகாந்த். ஜெயலலிதா உயிருடன் இருந்தது வரை  ரஜினி வாய் திறக்கவில்லை.விஜய் செய்த அளவுக்கு,விஜய் சேதுபதி விவசாயிகளுக்கு உதவியதைப்போல  ரஜினி ஏழைகளுக்கு உதவவே வில்லை.இதைப்போல எத்தனையோ கேள்விகள்.

   இவர் பிஜேபியின் 'கைப்பிள்ளை' என்கிற கருத்து தமிழகத்தில் வேர் விட்டிருக்கிறது என்பது உண்மை. மூன்று ஆண்டு காலம் பேசக்கூடாது என்பது  அவரது இரண்டு திரைப்படங்கள் பாதித்து விடக்கூடாது என்கிற சுய நலத்தின் வெளிப்பாடே!






திங்கள், 1 ஜனவரி, 2018

ரஜினியின் மந்திரிசபை--நெட்டிசன்ஸ் கலாட்டா.

காலை சுத்தினது நச்சுப்பாம்புன்னா அதுக்கும் மீம்ஸ் கிளப்புகிறவர்கள்  நெட்டிசன்ஸ் .வெறும் தண்ணீர்ப் பாம்புன்னா சும்மா விடுவார்களா? கிண்டி  கிளறி கேசரி பண்ணிவிட மாட்டார்களா? ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்த அடுத்த நாளே மந்திரிசபை அமைத்து விட்டார்கள்.
குடும்ப நலத்துறை: தனுஷ்.
கலாச்சாரம்; ஐஸ்வரியா தனுஷ்.
பால் வளம்: அனிருத்
கல்வி, வாடகை கண்ட்ரோல்: லதா
இப்படி குடும்பத்தை சுற்றியுள்ளவர்களை மையப்படுத்தி அதகளம் பண்ணியிருக்கிறார்கள்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தினால் தமிழக அரசியலில் எவ்வித மாற்றமும் நடக்காது என்பதாக ஆங்கில இணையதளம் சொல்கிறது. 49.34 சத விகிதம் என கணக்கு சொல்கிறது. அது மட்டுமல்ல ரஜினியின் கட்சி  பிஜேபியின் பி டீம் என்பதாக சொல்லி இருக்கிறது.
கர்நாடகாவின் வளர்ச்சியில் ரஜினிக்கு அக்கறை இருக்கிறது என்பதாக  ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் சொன்னதாகவும் ஒரு செய்தி  அந்த  இணையத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
"இதனால் கர்நாடகா சட்ட சபைத் தேர்தலில் ரஜினி பிஜேபிக்காக பிரசாரம்" என ஜோசியமும் சொல்லி இருக்கிறது.
இனி எப்படியெல்லாம் பட்டையை உரிப்பார்களோ?