திங்கள், 26 பிப்ரவரி, 2018

ஆண் பிள்ளை வேணும் சார்!

               எனது நண்பரின் மகன் .அண்மையில்தான் திருமணம் முடிந்திருந்தது.
தேனிலவுக்கு என தனியாக எங்கும் போகவில்லை. அஷ்டலட்சுமி, வடபழனி
கபாலீஸ்வரர் என கோவில் ,குளங்கள்தான்! பையன் கொஞ்சம் பக்திமான். நெற்றியில் விபூதி குங்குமம் இல்லாமல் பார்க்க முடியாது.

              "அங்கிள் ..உங்கள்ட்ட பேசணும். ஈவ்னிங் வரவா?" அவன்தான் பேசினான்.

           "இதுக்கெதுக்கு பெர்மிஷன்? வர வேண்டியதுதானே? ஏம்பா பிரச்னை  ஏதுமில்லையே?" சந்தேகம் வருமா வராதா? மூணாவது மனிதனிடம் தனியாக பேசுவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

           வந்தான்.சந்தேகம் கேட்டான். எனக்கு என்ன பதில் சொல்வது என்பது  தெரியவில்லை.

          "அங்கிள் ! டெய்லி ரெண்டு வாழப்பழம் சாப்பிடுறேன்?"   

           "ஏம்பா ..மலச்சிக்கலா ..இந்த வயசில?"

           "அதெல்லாம் இல்ல அங்கிள் ! காளான் ,உருளக்கெழங்கு, கடல் சிப்பி  இதெல்லாம் சாப்பிடுறேன்.!"

         "ஒடம்புக்கு நல்லதுதான்.அத ஏன் எங்கிட்ட சொல்றே?"

         மேலே பேசுவதற்கு தயங்கினான். இருந்தாலும்  சொன்னான் வெட்கப்பட்டபடி!

        "பெட்ரூமிலும் தென்மேற்கு மூலைய்லதான் 'நாங்க படுக்கிறோம்."

       "இந்த வாஸ்து எதுக்குப்பா? பெரியவங்க அப்படி படுக்க சொன்னாங்களா?"

      "இல்ல அங்கிள்.! ஒரு புத்தகத்தில படிச்சேன். இப்படியெல்லாம் சாப்பிட்டு  படுத்தால் ஆண் குழந்தை பெறக்குமாம். அது உண்மையா இருக்குமான்னு  ஆம்பள பிள்ள பெத்த உங்க கிட்ட கேட்டா சரியா இருக்குமேன்னுதான்  கேக்கிறேன்."

           இந்த காலத்தில் இப்படிப்பட்ட ஆளும் இருக்கிறானே என்கிற ஆதங்கம்தான் வந்தது.

         எங்கே படுத்தால் என்ன அது ஆணோ பெண்ணோ பிறக்கப்போகுது. ஆண் குழந்தை பிறப்பதற்கு என தனி செய்கை முறையா இருக்கிறது?

          அடப்பாவிகளா?
 

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

விவசாயம் இல்லாத மந்திரக்கிணறு...!

கிணறு வெட்டினாலே அது விவசாயம் பண்ணுவதற்காக இருக்கும் அல்லது  குடிக்க மற்ற அன்றாட வீட்டு வேலைகளுக்காக இருக்கும்.

கிணறு என்றால் கட்டாயம் அதில் தண்ணீர் இருக்கும். ஆனால் எத்தனையோ  அடிகள் தோண்டினாலும் ஊற்றுக்கண்களை சுத்தமாக அடைத்து விட்டு படிகளை கட்டி அடிவரை போனால் அது எப்படி கிணறு ஆகும்?

லிஸ்பனில் இருந்து வந்திருந்த ஒரு நண்பர் ஒரு படத்தைக்காட்டினார்.

"மாடர்னா கிணறு வேட்டிருக்கான்.வித்தியாசமா சுருள் படிகளை கட்டி வெச்சிருக்கான்.மூளைக்காரன்யா!" என்றேன்.

எனக்கு லிஸ்பனை பற்றி என்ன தெரியும். பட்டர் பன்தான் தெரியும்.மனதில் பட்டதை சொன்னேன்.

நண்பன் சொன்னான். " அது கிணறுதான்! ஆனால் தண்ணி இருக்காது.. அடிமட்டத்தில் தரை மாதிரிதான் இருக்கும். அதில் திசை காட்டி இருக்கும். அந்த கிணறை மந்திர,தந்திர வேலைகளுக்குத் தான் பயன் பட்டது. அது  ஆதிகாலத்து கட்டட கலையை பிரதிபலிக்கும்.நிறைய சரித்திரக் கதைகள் இருக்குப்பா.ஒரு கிணத்துக்கும் இன்னொரு கிணத்துக்கும்  அடியில் சுரங்கப்பாதைகளும் இருக்கும்" என்றான்.

"சரி லிஸ்பனில் இருந்து இதத்தான் கொண்டாந்தியா? வாசனை திரவியங்கள் ஏதும் கொண்டு வரலியா?"

"வாசனைத் திரவம் வேணாமா?"

" வேணாம்னு சொல்லிருப்பேன்னு நெனைக்
கிறீங்களா?"

சனி, 24 பிப்ரவரி, 2018

இலியானாவுக்கு கல்யாணம் உண்மையா?

எத்தனையோ கோடிகள்..நிரவ்மோடி மாதிரி பில்லினர்ஸ் சுருட்டிக்கொண்டு  ஓடினாலும் நம் மக்கள் மென் மக்களே! மேன் மக்களே!!

அன்றைய நாளிதழ் செய்தி சில நிமிடமே அசை படும்.ஆனால் ஒரு நடிகைக்கு  கல்யாணம் நடந்ததா இல்லையா என்கிற கேள்வியை  ஆபிஸ் வரை கடத்திக் கொண்டு போய் விவாதம் நடத்தி சாலமன் பாப்பையா தீர்ப்புக்காக காத்திருப்பார்கள்.

மனிதர்களின் வாழ்க்கையில் திரைப்படமோ,நடிக நடிகையரோ பேசு பொருளாக இல்லாமல் போவதில்லை.

இதில் ஊடகங்களுக்கு முக்கியப்பங்கு !

மைக்கை வாய்க்குள் திணிக்காத குறையாக கேட்பார்கள். ,கோபப்பட  முடியாது. விஜயகாந்த் மாதிரி தில்லும் கிடையாது. அனுசரித்துப் போய்விடுவார்கள். சிலர் மட்டுமே இவர்களை சமாளிப்பதற்கு ஜிம் பாய்ஸ்  வைத்துக் கொள்வார்கள்.

அன்று மாட்டியவர் நடிகை இலியானா.

இவருக்கும் வெளிநாட்டு போட்டோகிராபர் ஆண்ட்ரு என்பவருக்கும்  டீப் லவ்.
நடுத்தெரு என்றும் பார்க்காமல் இருவரும் உதடுகளை மென்று தின்றதை  சிலர் படம் எடுத்தும் போட்டு விட்டார்கள். அவர்கள் காதல்  என்பது அத்தனை கண்டங்களுக்கும் தெரிந்து விட்டது.

ஆனாலும் கல்யாணம் நடக்கவில்லையே! அதை கிண்டாமல் கிளறாமல்  இருப்பது பெரும்பாவம் அல்லவா?

"உங்கள் இருவருக்கும் கல்யாணம் நடந்து விட்டதாமே, உண்மையா?" கொக்கி போட்டு இழுக்கிறாராம் சேனல்காரர்.

"சோசியல் மீடியாவில் என்ன வந்திருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். பிறகேன் என்னை கேட்கிறீர்கள்.எங்கள் தொடர்பு  எங்கே,எப்படி  தொடங்கியது என்பதை பல இன்டர்வியூக்களில் சொல்லி முடித்தாகி விட்டது.அது என்னுடைய  பெர்சனல் மேட்டர்.அதை மறைக்கவும் ,மறுக்கவும் விரும்ப வில்லை.ஆகவே என்னிடம் இதைப்பற்றி கேட்கவேண்டாம்!"

"அப்படியானால் கல்யாணம் நடந்து விட்டதா?"

"எல்லாமே சொல்லியாகிவிட்டது.இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை."

"நீங்கள் தென்னிந்திய படங்களில் நடிக்கப்போவதாக செய்தி வந்திருக்கிறதே?"

"நான் அந்த படங்களில் நடிக்க  விரும்பவில்லை."

அப்பாடா..! நிருபரின் கடமை முடிந்தது.
    

வாம்மா மின்னல்...வாரியா அரசியலுக்கு?

                  எல்லாப் புகழும் அவர்களுக்கே..!

                 யார் அவர்கள்?

               யாருக்குத் தெரியும்?விடுங்கசார்!வேலைக்காரிக்கு அரசியல் தெரியும்  என்கிறபோது  வீட்டுக்காரிக்கு மட்டும்  ஐ  மீன்  மனைவிக்கு தெரிந்தால்  குற்றமா ?மனைவியை அடக்கி வைக்கும் சர்வாதிகார வம்சமா நீங்கள்?

              நடிகர்கள் அரசியலுக்கு வந்தது மாதிரி நடிகைகளும் வந்தார்கள். திறமைக்கு மரியாதை.! மந்திரி ஆனார்கள். இப்போது ஸ்ரீபிரியா வந்திருப்பது போல ரம்யஸ்ரீயும் குதிக்க ஆசைப்படுகிறார்.

           குதிக்கட்டுமே. கவர்ச்சி நடிகை வரக்கூடாதுன்னு சொல்வதற்கு நாம்  யார் சார்?  

          "எனக்கும் சமூகத்துக்கு தொண்டு செய்யனும்னு ஆசை! அரசியலில் ஆர்வம் இருக்கு,எந்த கட்சியாவது அழைப்பு விட்டால் சேர்ந்து கொள்வேன். தீவிரமாக வேலை செய்வேன்"

             இப்படி ஆந்திராவில் அறிக்கை விட்டிருக்கிறார். அங்குள்ள கட்சிகள்  இதுவரை எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள பரிசீலித்தால் பெண் ஜென்மம் சாபல்யம் அடையும்.

                    பிஜேபிக்குத்தான் கவர்ச்சி இல்லை. பரிசீலனை செய்யலாம்.

முழு ரவுடித்தனத்தையும் பார்த்ததில்லையா?!

"உங்க பருப்பெல்லாம் இனி வேகாது. வீர வசனம் பேசி வெட்டியாய் பொழுதை போக்காதிங்க"!இப்படியாக,

"ஊழல்,லஞ்சத்தில் ஊறிப் போய் கிடக்கு"என்று அபாயச்சங்கு ஊதிய மக்கள் நீதி மைய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன், " சிஸ்டமே கெட்டுக் கிடக்கு. அத மாத்தணும் .வருவேன்,வந்தே  தீருவேன்" என மாநாடு போடப் போகிற ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் அப்படி  ஆணி அடித்திருப்பவர் ஓபிஎஸ்.

அதிமுக பேச்சாளர்களுக்கு அடி எடுத்துக் கொடுக்கும் வகையில் பேசி தீப்பொறி ஆறுமுகங்களுக்கு உற்சாக பானம் கொடுத்திருக்கிறார்.

"முதல்வர் எடப்பாடியினால் இப்படியெல்லாம் தில்லாக பேசமுடியுமா?" என  துணை  முதல்வரின் தொண்டர்கள் பூரித்துப்  பொங்கல் வைத்து கொண்டாடும் மன நிலைக்கு வந்திருக்கிறார்கள். எடப்பாடியாரின் ஆட்களுக்கும் வருத்தம்தான்!

"நம்ம ஆள் முதல்வராக இருந்தும் தில் இல்லாமல் இருக்காரே! அடிச்சு தொங்க விடவேணாமா, " என புழுங்காமல் இருப்பார்களா என்ன?

"அரசியல் வானில் புதிதுபுதிதாக பறக்கும் அரிதாரம் பூசிய பலூன்கள் வெடித்துச்சிதறும். வீர வசனம் பேசுகிறவர்கள் விரைவில் புஸ்வாணம் ஆவார்கள்" என்று வாசித்த ஐயா  பன்னீர்செல்வம் துரோகிகளையும்  விட்டு வைக்கவில்லை.

ஆனால் துரோகிகளின் பெயரை சொல்லும் தைரியம்தான் இல்லாமல் போய்விட்டது. ஆர்.கே. நகரில் அவைத்தலைவர் மதுசூதனனை தோற்கடித்த  தினகரன் பெயரையோ,அல்லது சசிகலா பெயரையோ சொல்லி குற்றம் சாட்ட  இன்னமும் தயங்குவதின் ரகசியம்தான் தெரியவில்லை.

அமைச்சரவையில் இருக்கும் எவராவது "சசியை  பகிரங்கமாக குற்றம் சாட்ட முடிகிறதா .விடுகதையாகத் தானே சொல்கிறார்கள்?" என்பது பொதுமக்களின்  குற்றச்சாட்டு.

சரி, பலூன் மேட்டருக்கு நடிகர்கள் தரப்பின் பதில் என்ன?

ரஜினி தரப்பினர் 'காலா" படத்தில்தான் பரபரப்பாக இருக்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்வார்களோ தெரியவில்லை.

ஆனால் இந்த வசனம் யாரை நோக்கி வீசப்பட்டது என்பது தெரியவில்லை,

"இந்த கரிகாலனின்  முழு ரவுடித்தனத்தை பாத்தது இல்லேல்ல... பாப்பிங்க." என்கிற வசனத்தை இணையங்களில் பரப்பி வருகிறார்கள்.

அத்துடன்" தலைவருக்கு இணை எவருமில்லை. நாய்கள் குரைக்கட்டும். சிங்கம் அவர் கர்ஜிப்பார்" என எழுதுகிறார்கள்.

இது கமலுக்கா? ஓபிஎஸ்.சுக்கா?

பகிரங்கமாக சொல்ல அவர்களுக்கும் தில் இல்லை.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

குற்றவாளிக்கு பிறந்த நாள் கோலாகலம்.!
உச்ச நீதிமன்றம் ஊழல் குற்றவாளி என்று அபராதமும்,நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்ட முன்னாள் முதல்மந்திரி ஜெயலலிதாவை அவரது கட்சியினர் சிலை திறந்து, நாளிதழ் வெளியிட்டு ,பட்டாசு வெடித்து  கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஜெயலலிதா அம்மா. வாரி வழங்கிவிட்டு போய்விட்டார். இன்னும் அவர் பெயர் சொல்லி ஆட்சி செய்ய முடிகிறது.அந்த நன்றி அவர்களுக்கு.! ஆனால் நீதிக்கு முன் அவர் குற்றவாளி.

ஜெயலலிதா அதிமுகவினருக்கு காமதேனு! கோலாகலமாக கொண்டாடவில்லை என்றால்தான் குற்றம்!

இதில் வேடிக்கை என்னவென்றால் இபிஎஸ்--ஓபிஎஸ் இவர்களின் பவர் பாலிடிக்ஸ்தான்!

புருஷனை கைக்குள் போட்டுக்கொள்ள முதல் தாரமும் இரண்டாம் தாரமும்  நடத்துவாள் பாருங்கள் சாகசங்கள்.! வயசுக்காரனாக அவன் இருந்துவிட்டால்  அதிர்ஷ்டசாலி. முத்திப்போனவனாக இருந்தால் முடிந்தது சோலி.

இபிஎஸ் -ஓபிஎஸ் இருவரும் தொண்டர்களையும் பிரமுகர்களையும் அவர்கள் பக்கம் இழுப்பதற்கு இரண்டு பெண்டாட்டிகளைப் போல சாகசங்களை  செய்து காட்டுகிறார்கள்.அன்றைய விழாவில் பளீர் என வெள்ளையாக  தெரிந்தது.

சிலை திறப்பு விழாவில் மேலோட்டமாக பேசி விட்டார் இபிஎஸ்.

ஆனால் ஓபிஎஸ் ?

கட்சித்தலைவர் தொடங்கி கடைசித் தொண்டன் வரை எல்லோருக்கும் வணக்கம் வைத்தார். அதில் பலர் 'நம்மளை மறக்கலப்பா" என ஆறுதல் பட்டுக்கொண்டார்கள். அதுதானே அவருக்குத் தேவை.

"புரட்சித் தலைவர்,பொன்மனச்செல்வி "என்று ஆடை மொழியிட்டு வாசித்த வாசிப்பெல்லாம் பிரமாதமாக வேலை செய்யுமே.! ஓபிஎஸ் பேச்சில்  மெய் மறந்த சன் செய்தி நேரடி ஒளிபரப்பில் நிலைய வாசிப்பாளர் குறுக்கிட்டு கட் பண்ணியது, 

 எல்லோருக்கும் கேட்டதே!

அந்தஅளவுக்கு பன்னீர் குளிர்ச்சியாக இருந்தது.

பிரபலங்களும் தொண்டர்களும் அவரை சிலாகித்துப் பேசியதை கேட்க முடிந்தது.எடப்பாடியாரை முந்திக்கொண்டு வருகிறார் என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு லியாகத் அலி தயாரித்துக் கொடுத்திருந்த உரை வெகு சிறப்பு. சினிமாவுக்கு வசனம் எழுதியவராச்சே! இதையும் அங்கிருந்த சிலர்தான் சொன்னார்கள்.


சுட்டுக் கொன்றாலும் தப்பில்லை.!

                             மகாசிவராத்திரி. ஈஸ்வரை தரிசனம் செய்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் லலிதா.( பெயர் மாற்றப்பட்டுள்ளது.) பதினேழு வயது இருக்கும்.ஏழை என்றாலும் அழகில் அவள் பணக்காரிதான்!

                           உதட்டுச்சாயம் தேவை இல்லை.வெற்றிலை சிவப்பே போதும். மாநிறம். நாலு வீட்டில் வேலை.அங்கே கிடைக்கும் பலவித உணவு வகையே  அவளுக்கு போதுமானது.ஏதாவது ஒரு வீட்டில் இரவில் கட்டையை சாத்தி விடுவாள்.அம்மா அப்பா இல்லாத அநாதை.

                         ஊர்ப்பயல்களுக்கு இது போதாதா? வாய்ப்பு எப்போது கிடைக்கும், வாயில் அள்ளிப் போட்டுக்கொள்ளலாம் என காத்திருந்தார்கள்.அவளோ எவனையும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை.பேசுவதும் இல்லை. இப்படித்தான்  அவள் வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

                      சிவராத்திரியில் அவளை சின்னபின்னாமாக்கவேண்டும் என்பது  எவன் எழுதிய விதியோ...அல்லது சதியோ தெரியாது.

                    வீடு திரும்பிக்கொண்டிருந்தவளை ராம் பிரவேஷ் சர்மா மற்றும் இருவர் வழி மறித்து, வாய் பொத்தி, கடத்திச்சென்று ஒரு பாலத்துக்கு அடியில் கிடத்தி கூட்டாக வன்புணர்வு செய்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல கூர்மையான ஆயுதமும் பயன்பட்டிருக்கிறது.தாக்கப்பட்டிருக்கிறாள். பிறப்புறுப்புக்கு கீழே  குத்திக் கிழித்து ரத்தம் ஆறாக பெருக்கெடுத்திருக்கிறது. அவளை அங்கேயே போட்டு விட்டு போய்விட்டார்கள்.

                       இரவெல்லாம் அங்கேயே கிடந்தவளை  அதிகாலையில் அவ்வழியாக சென்ற சிலர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். தையல் போட்டு நான்கு யூனிட் ரத்தம் செலுத்தி காப்பாற்றியுள்ளார்கள். மேற்கு வங்கத்தில் நடந்துள்ள இந்த காம கோரத்தில்  தொடர்புடைய மிருகங்கள் பிடிபடவில்லை.

           அவர்களை கைது பண்ணி வழக்குப்போட்டு இழுத்தடிக்காமல் சுட்டுக்கொல்வதே சரியான தீர்வாக இருக்கும்.
 

புதன், 21 பிப்ரவரி, 2018

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.இதற்காக காசி ஹரித்வார் என்று போய் சீட் ரிசர்வ் பண்ணிக் கொண்டு வருவார்கள்.

'எல்லாமே ஆண்டவன் கையில் என்று மேலேயே கையைக் காட்டிக் கொண்டிருந்தவருக்கு ஒரு வழியாக பச்சைக் கொடியை ஆட்டிவிட்டான். ரஜினி காவலர்களை ஆக்கப் பணிகளில் இறக்கி விட்டு ஒவ்வொரு மடமாக சென்று பிரார்த்தனை செய்யா ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால் கமல் படக்கென தேதியை அறிவித்து பயணத்தை தொடங்கி 'மக்கள் நீதி மையம்' என பெயர் வைத்து விட்டு கொடியையும் ஏற்றிவிட்டார். 'மக்கள்னா எந்த மக்கள்னு சொல்ல வேணாமா,?' என்கிறார் ஓர் அறிவாளி. 'அவமானம்' என்கிறார் 'பின் நவீனத்துவ பேரரசு ' நம்பர் ஒன் குற்றவாளி என்று  உச்ச நீதிமன்றம் பச்சை குத்திய ஒரு அம்மாவின் படங்களை அரசு பயன் படுத்துகிறதே என்று எந்த அறிவாளிகளும் பொங்கியதாக தெரியவில்லை.

சரி அதெல்லாம் தமிழக மக்களின் தலை எழுத்து.!

இப்ப கமலும் ரஜினியும் அரசியலுக்கு வந்தாச்சு.

ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் வைத்திருக்கிற  கட்சிக்கு மாத செலவு இருபத்தியெட்டு லட்சம்.ஆபிசில் பனிரெண்டு பேர் வேலை பார்க்கிறார்கள். தெலுங்கு தேசிய கட்சிக்கு இதை விட பெரிய ஆபீஸ். பத்து ரிப்போர்ட்டர்கள் கையில் இருக்கிறார்கள்.உளவு சொல்ல.!

இப்படி கட்சி ஆபீசுக்கே லட்சங்கள் தேவைப்படுகிற காலத்தில் கமலும் ரஜினியும் எப்படி செலவு செய்வார்கள்?

கமலை விடுங்கள் சொந்தக்காசில் படம் எடுக்கிறவர்  கைக்காசை செலவு செய்யலாம். ஆனால் ரஜினி?

தமிழக மக்களுக்காக இலவசமாக ஒரு பள்ளிக்கூடம் கூட கட்டியதில்லை. லதா ரஜினிக்கு கொடுத்த கடனை வசூலிக்க சுப்ரீம்கோர்ட் வரை சேட்டு போகிறார். கார்ப்பரேசனுக்கு வாடகை கொடுப்பதிலும் பிரச்னை !   

இப்படி  சொந்த சிஸ்டம் நொந்து கிடக்கிறது. இவர் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறாரோ?    

தேர்தலில் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டியது வரும். எந்த புண்ணியவான் கொடுக்கிறானோ தெரியவில்லை.

இவர்கள் தீவிர அரசியல் செய்தால் பாதிக்கப்படுவது திராவிடக்கட்சிகள்தான்!
அது நன்றாகவே தெரிகிறது.


திங்கள், 19 பிப்ரவரி, 2018

அன்னைக்கு ஏன் சின்ன பிள்ளைத்தனம்?

தெருவில் மங்கள ஒலிகள் கேட்கின்றன.
கட்டியம் சொல்கிறவர்கள்  மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே  வீதிகளை கடந்து வருகிறார்கள்.
தெருவெங்கும் மாவிலைத் தோரணங்கள் .வாழை மரங்கள் .
பாண்டியன் சிறை பிடித்த எதிரிநாட்டவர்கள் கட்டி இழுத்து வரப்படுகிறார்கள்.
பெருமைக்குரிய காட்சிகள் அல்லவா!
மாடங்களில் மகளிர் கூட்டம்! வேல்மாறனைப் பார்க்க!
ஆனால் இங்கோ ஒருத்தி மனதில் கோபம்.
வெற்றி மாறனைப் பார்க்காதே  என தாயே தடை போடுகிறாள் என்றால்  கவலையும் கோபமும் கலந்து வெறுப்பை  உமிழாதா?
"அடியே அன்புத் தோழி!
நெடிய தோளுடையவளே! கை நிறைய வளையல் அணிந்திருக்கிறாய்.
வாள் போன்ற கண்கள்.
நீயே கேளடி என் குறையை!
பகைவரை வென்று வீரம் வெளிப்படும் வேல் ஏந்தி வருகிறானே வீர மகன். அவனை நான் பார்க்கக்கூடாதாம்! அவன் அணிந்துள்ள மாலையையும்  காணக் கூடாதாம்.!
அவள் மூத்தவளா அல்லது சின்னவளா? என் வயதிலிருந்துதானே அவள்  மூப்பு அடைந்திருக்க வேண்டும்!  எனக்குள்ள இந்த உணர்வு அவளுக்கு  இருந்திருக்காதா?"
கோபம் கொண்டு பேசுகிறாள் .
இதையே 'முத்தொள்ளாயிரம்"

"வளையவாய்  நீண்ட தோள் வாட் கணாய் அன்னை
இளையவளாய் மூத்திலள் கொள்ளோ- தளையவிழ்தான்
மண் கொண்ட தானை மறங்கனல்  வேல் மாறனைக் 
கண் கொண்டு நோக்கல் என்பாள் " என்கிறது.

எடப்பாடியை வீழ்த்தும் முயற்சியில் ஓ.பி .எஸ்.!

"முதல்வர் பதவியில் இருந்து திட்டமிட்டு என்னை பதவி விலக வைத்தனர்" என்று  கலனில் இருந்து இரண்டு சொட்டு அமிலத்தை எடுத்து  கட்சியின்  பட்டு வேட்டியில் விட்டிருக்கிறார் துணை முதல்வராகி இருக்கிற ஓபிஎஸ்.

ஹெட் கிளார்க்காக இருந்தவனை வெறும் குமாஸ்தாவாக  தூக்கி  அடித்தால்  அவன் எத்தனை நாளைக்கு பொறுமையாக இருப்பான்?

எப்படா சான்ஸ் கிடைக்கும் கோழியை அமுக்கி பிரியாணி போடலாம் என்பதிலேதான் அந்த கிளார்க்கின் நோக்கம் இருக்கும். அதைப் போலத்தான் ஓபிஎஸ் மன நிலையும் இருந்து வந்திருக்கிறது என்பதாக நாம் யூகிக்க வேண்டி  இருக்கிறது.

இத்தனை நாளும் அமைதியாக இருந்தவர் ஒவ்வொரு பலூனாக  உடைக்க ஆரம்பித்திருக்கிறார்." பிரதமர் மோடி சொன்னதால்தான் இணைவதற்கு ஒப்புக்கொண்டேன்.பதவி எதுவும் வேண்டாம் என மறுத்தும் என்னை துணை முதல்வர் பதவிக்கு சம்மதிக்க வைத்தார்" என்று கொளுத்திப் போட்டது எடப்பாடி அணிக்கு கடுமையான எரிச்சலை கொடுத்திருக்கிறது.

பிஜேபியின் கட்டுப்பாட்டில் நாங்கள் இல்லை என இவர்கள்டாம்டாம்அடித்து சொன்னதெல்லாம் வெத்து கப்சா ஆகி விட்டது.

"நான் முதல்வராக இருந்தபோது நல்ல பேர் கிடைத்தது. இது பொறுக்காமல்  கெட்ட எண்ணத்துடன்  என்னை நிர்பந்தம் செய்து அழுத்தம் கொடுத்து விரட்டப்பார்த்தனர்" என்று சசி அணியினரின் சதி வேலைகளையும் சொன்னார். அப்போது சசி அணியில் இருந்தவர்களில் யார் யார் என்பதையும்  மறைமுகமாக குத்தி இருக்கிறார். தர்ம யுத்தம் தொடங்குவதற்கு எடப்பாடியும்  ஒரு காரணம்தானே! சசி பக்கம் இருந்தார் அல்லவா?

"வேற யாராவதாக இருந்தாலும்  தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்" என   போட்ட குண்டும் குமுறலை ஏற்படுத்தி இருக்கிறது.
 

மு.க.அழகிரியின் விரக்தி.!

"ஓடினாள்..ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் "என்று கலைஞர்  எழுதிய வசனம் பராசக்தி கல்யாணிக்கு ஒரு காலத்தில் பொருந்தியது.

இன்று அவர் பெற்ற பிள்ளைக்கு பொருந்தும் போலிருக்கிறது.

விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் மு.க. அழகிரி .

"ஏன் இப்படி பேசினோம் ?" என அவரே பின்னர் வருந்துகிற அளவுக்கு வார்த்தைகளை வெளியிடுகிறார்.

"உதயநிதி ஸ்டாலின் அரசியலில் குதித்திருப்பது" பற்றி செய்தியாளர்கள்  கேட்ட கேள்விக்கு அழகிரி சொன்ன பதில் காழ்ப்பு உணர்ச்சியின்  உச்சம்  தாண்டி விட்ட  கோரம்.

""அரசியல் சாக்கடைதான்! அதில் யார் வேண்டுமானால் குதிக்கலாம்" என்பது  பதில்.! கலைஞர் உள்பட அழகிரியின் மொத்த குடும்பத்தையும் இதை விட இழிவு படுத்த எடப்பாடி வகையறாக்கள் தேவை இல்லை.

அழகிரியும் அந்த சாக்கடையில் குதித்து குளித்து மத்திய அமைச்சர் பதவி வரை அனுபவித்து ஓய்ந்திருப்பவர்தான். கட்சி பதவி கை விட்டு போன பிறகு  அவர் விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதைத்தானே அவரது பதில் காட்டுகிறது.

நாளைக்கே ஒரு பதவி கிடைக்குமேயானால் சாக்கடை கங்கோத்ரி ஆகி விடுமா?


எவனோ ஒரு அறிவாளி  எந்த காலத்திலோ எதற்காகவோ சொன்னதை வைத்துக் கொண்டு அதையே காலம் காலமாக அரசியல்  ஒரு சாக்கடை என்பதாக சொல்லி வருகிறார்கள்.

விதவைகளுக்கும் மறுவாழ்வு இருக்கிறது என்கிறபோது விரக்தியாளர் களுக்கு மட்டும் புனர்ஜென்மம் கிடைக்காதா?

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

நிர்வாணமாக்கிய அநியாய வரி விதிப்பு.

அவள் கற்பனை படைப்பு இல்லை. வாழ்ந்த சீமாட்டி. பட்டமகிஷி. நேசிக்கப்பட்டவள்.

அவள் நிர்வாணமாக குதிரை ஏறி வருகிறாளா?

"என்னய்யா சொல்றீங்க...ராணி குதிரை ஏறி அம்மணமா வர்றான்னா  ராஜா  சும்மா இருந்தானா , ஒரே சீவா தலைய சீவி இருக்கமாட்டானா?"

இப்படி பலர் கேட்பார்கள். கேட்காவிட்டால்தான் கற்பனையாகிப் போகும்  வரலாறு !

காடிவா என்பது அவளது பெயர்.கடவுளின் பரிசு என்பது பெயரின் பொருள்.

மன்னர் லியோ பிரிக் நம்ம எடப்பாடி  மாதிரி. கன்னாபின்னா என்று  பேருந்து கட்டணங்களை உயர்த்தி நசுக்கிய மாதிரி அந்த மன்னனும் பல வகைகளில்  வரிகளை போட்டு கசக்கிப் பிழிந்தான்.

மக்கள் மன்றாடினார்கள்.

"அட போங்கடா போக்கத்தவனுங்களா ..அதெல்லாம் முடியாது" என்று  பிடிவாதமாக மறுத்து விட்டான்.

"மகாராஜா கேட்காவிட்டால் என்ன மகாராணி கிட்ட சொல்வோம். பொண்டாட்டி சொன்னா புருஷன் கேட்காம போவானா?" என்று  நம்ம ஊர் பெண்கள் மாதிரி நினைத்து விட்டார்கள்.

மன்னனிடம் "மச்சான். நம்ம ஜனங்களை கொடுமைப்படுத்தலாமா ..வரியை  எடுங்க. வேண்டாம்."என்று மகாராணி சொன்னாள். அழுதாள்.

கேட்கவில்லை மன்னன். கோபம்தான் அதிகமாகியது.

"பட்டத்து ராணி நீ. பஞ்சைகளுக்காக நீ கெஞ்சலாமா...உனக்கு அவர்கள்  மீது அவ்வளவு கவலைன்னா கடை  வீதியை குதிரை மீது நிர்வாணமா உட்கார்ந்து  ஒரு சுற்று சுற்றிவிட்டு வா" என்கிறான். நமது சென்னை ரங்கநாதன் தெரு மாதிரி நெருக்கமான கடை வீதி அது.

 இது மெர்ஸியா நாட்டில் நடந்தது.

அவளும் நிர்வாணமாக குதிரை மீதேறி சாலைகளை கடந்தாள்.

டென்னிசன் எனும் கவிஞர் அரசி
காடிவாவை  இப்படி புகழ்ந்திருக்கிறான் " கற்பு எனும் ஆடை  அவளது இடையில் இருந்தது."

சனி, 17 பிப்ரவரி, 2018

ஓபிஎஸ் ஒப்புக்கொண்ட உண்மை..

என்னதான் எழுதினாலும் கரடியாக கத்தி சொன்னாலும் கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே என்பார்கள்.

அதென்ன கவட்டுக்குள்ளே என்பதற்கு  அர்த்தம் சொல்கிறவனுக்கும் தெரியாது. அதை கேட்கிறவனுக்கும் புரியாது.

ஆனால் சில உண்மைகளை அடித்துச் சொன்னாலும் 'ஊகும்..அப்படி எல்லாம்  நடக்கவே இல்லை. நீங்க நல்லா கதை சொல்றீங்க .சினிமாவுக்குப் போகலாம்" என்று நம்மளையே திருப்பி அடிப்பார்கள்.

நம்ம ஓபிஎஸ் நடத்தின தர்ம யுத்தம் கதைக்கு பின்னாடி இருந்த பெரிய ஆள்  மோடி தான் என்று ஊடகங்கள்  சொன்னபோது அய்யா ஓபிஎஸ் மறுத்து சொன்னதும்  அந்த கதைதான்.இப்போது அவரே எங்கள் இணைப்புக்கு எஜமான் மோடிதான்  காரணம் என்பதாக சொல்லி இருக்கிறார்.

"மோடி சொல்லித்தான் ஒண்ணா இணைஞ்சோம்" என சொந்த ஊரில் போய் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

எல்லாம் சரி..இன்னொருத்தன் வீட்டு பெட்ரூமுக்குள் நடக்கிற சண்டையை  பற்றி  பக்கத்து வீட்டுக்காரனுக்கு என்ன கவலை?

பாரதப் பிரதமர் மோடிஜிக்கு அதிமுகவில்நடந்த உள்கட்சி சண்டையில்  என்ன அக்கறை? அந்த சண்டையை பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் காரன்  உள்ளே வந்து விடுவானா?

காலம் காலமாக பாகிஸ்தான் வம்பு சண்டை இழுத்துக் கொண்டு இருக்கிறது. அதை அடக்க வழி தெரியாமல் பே முழி முழிக்கிறது அரசாங்கம்.ஆனால் அவர்களுக்குக் கவலை அதிமுக இரண்டாக பிளந்து விடக்கூடாது என்பதில்!

அதிமுகவுக்கும் பயம்.மந்திரவாதியின் பேச்சுக்கு கட்டுப்படாவிட்டால்  எதையாவது ஏவி விட்டு விட்டு விடுவார்களே , என்ன பண்ணுவது? இவர்கள் சுத்தம் இல்லை.சுருட்டுவதற்குதுணையாக இருந்த புண்ணியவதியும் போய்ச் சேர்ந்து விட்டார்.அடக்கி ஆண்ட சின்னம்மாவும் சிறைக்குள்ளே.

மிச்சம் இருக்கிற ஆண்டுகளில் எஞ்சி இருப்பதையும் சுருட்டிவிட்டால்  ஜென்ம ஜென்மத்துக்குப் போதும்.அதுக்கு ஒரே வழி.அவ்வவ்போது  வம்பு இழுத்தபடியே வாழ்க்கையை ஓட்டி விட வேண்டியதுதான்,

அதற்காக எத்தனை மந்திரவாதிகள் மிரட்டினாலும் அடங்கி ஒடுங்கிப் போய்விடு.

வாழ்க ஜனநாயகம் .ஜெய் மேக்  இந்தியா.


 

புதன், 14 பிப்ரவரி, 2018

எடப்பாடியாரின் 'ஸ்லீப்பர் செல்' விஜயதரணி ?

                     இந்திய அரசியலில் எவ்வளவோ நடக்கிறபோது  நம்ம ஊர் அரசியலில்  இந்த அளவுக்குக் கூட நடக்கலேன்னா அப்புறம் என்ன அரசியலுக்கு மரியாதை?

                காங்.கட்சியில்  வேட்டி சட்டை கிழியலே என்றால் கோஷ்டியில்  ஏதோ கோளாறு, அல்லது திருந்திவிட்டார்கள் என்று அர்த்தம்.ரொம்ப நாள்  அமைதிக்கு எம்.எல் .ஏ.விஜயதரணி வேட்டு விட்டு விழா கொண்டாடி விட்டார்.

        "உங்களுக்கு வேணுமானால் ஜெயலலிதா  ஊர் சொத்தை  சுருட்டிய குற்றவாளியா தெரியலாம். ஆனால் அவங்க எனக்கு வீராங்கனை.அவங்க படத்தை சட்டசபையில திறந்ததில் என்ன தப்பு? நான் தனிப்பட்ட முறையில்  சி.எம்.முக்கு தாங்க்ஸ் சொன்னதில் தப்பு இல்ல. ராகுல் கேட்டா நான் சொல்லிக்கிறேன் "என்று தமிழ்நாடு காங்.தலைமைக்கு செவுளில் ஓங்கி  ஒரு  அறை விட்டிருக்கிறார். என்னய்யா உங்களால் பண்ண முடியும்? கட்டை விரலை உயர்த்தி 'தம்ஸ் அப்' காட்டிய தைரியம் யாருக்குவே வரும்?

        "யோவ் கதர்ஸ்!. ஜெயலலிதாவ ஆஸ்பத்திரிக்கு ராகுல்  வந்து பார்த்தாரே  அப்ப ஏன் சத்தம் போடல? அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?" என்கிற பாணியில் அதிரடி கொடுத்தால் பதிலடி கொடுக்க ஆள் இல்லாமல்  போயிடுமா?

             கோபண்ணா கொந்தளித்துவிட்டார், "ராகுல் அப்ப  வந்தபோது ஜெயலலிதா  குற்றவாளி என்கிற தீர்ப்பு வரலே.அது தெரியுமா உனக்கு?' 

        அம்மணியிடம் பதில் இல்லை. ஆனால் தன்னுடைய தொகுதிக்கு கேட்டதையெல்லாம் செய்து கொடுத்தார்,அந்த நன்றி எனக்கு இருக்கிறது  என்று செண்டிமெண்டாக தடவி விட்டிருக்கிறார்.

    ஒரு சி.எம்.எல்லா தொகுதிக்கும் நல்லது செய்யவேண்டும் என்பது முக்கிய கடமை. இது கூட ஒரு எம்.எல்,ஏ.க்கு தெரியாமல் போய் விடுமா? அதிமுகவை  தூக்கி வைத்துக் கொண்டாடுவதைப் பார்த்தால்  ஸ்லீப்பர் செல்களில் இவரும் ஒருவரா?

             சந்தேகம் வருமா வராதா?


           

திங்கள், 12 பிப்ரவரி, 2018

நமக்குத் தேவை இடதுசாரி தத்துவமே !

"ஆன்மீக அரசியலோ, அவிசாரித்தன அரசியலோ நமக்குத் தேவை இல்லை..!' என்று உங்களால் சொல்ல முடியுமா?" என்று எனது நண்பர் ஒருவர் கேட்டார்.
  
   "அது எப்படி முடியும் .இந்த இரண்டில் ஒன்றை சார்ந்துதானே அரசியல் நடக்கிறது.எந்த கட்சியாவது அதனுடைய கொள்கைப்படி நடந்திருப்பதாக  சொல்ல முடியுமா?ஜனங்களும் அப்படித்தானே இருக்காங்க. 'ப்ரீ'யா எதை கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்கிறாங்க.காசுக்கு ஓட்டை விற்கிற குடிமக்கள் தானே நாம்ப?"---எனது பதில் அவருக்கு நிறைவைத் தரவில்லை என்பதை  முகம் காட்டியது,

    "ப்சு "

" நீங்க என்ன நினைக்கிறிங்க?"

"இடதுசாரி அரசியல்தான் நமக்கு சரிப்படும்னு நினைக்கிறேன்.கேரளாவில்  சாத்தியம்னா நமக்கு சாத்தியமாகாதா?"

" ஆர்.கே.நகர் தேர்தல் மாதிரி ஒரு தேர்தலை அங்க நடத்த முடியுமா?  அங்க ஜனங்க  சிந்திக்கிறாங்க.இங்கே எவ்வளவு கொடுப்பேன்னுதானேகேட்கிறாங்க.
சொல்வதற்கு கூச்சமாகத்தான்  இருக்கிறது." என்றேன்.

"இன்னொன்று எனக்கு புரியல சார்"என்றபடியே கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தை விரித்துப் படித்தார். "காற்றை எதிர்த்துக்கொண்டுதான் காற்றாடி உயரச் செல்கிறது.காற்றுடன் அல்ல' என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னதாக  எழுதி இருக்கிறது. இது எப்படி சாத்தியம்?"

"எனக்கு விஞ்ஞான ரீதியாக பதில் சொல்லத் தெரியாது. கையில் உள்ள நூல் இல்லேன்னா பறக்க முடியுமா?இப்ப எதுக்கு இந்த தத்துவம்னு தெரியல? இதுக்குப் பதில் கட்டாயம் தெரியணும்னா தெர்மாகோல் மந்திரி செல்லூர் ராசு கிட்டதான் கேட்டுக்கணும்.அது சரி சர்ச்சில் தத்துவம் உங்களுக்கு என்ன சொல்லுது?"என்று திருப்பி அவரையே கேட்டேன்.

"ஊழல் குற்றவாளி நம்பர் ஒன் என்று சுப்ரீம்கோர்ட்டினால் தண்டிக்கப் பட்ட   ஜெயலலிதாவின்   படத்தை சட்டசபையில் திறப்பதற்கு பாஜக அரசும் துணையாக இருந்ததைத்தான் காட்டுதுன்னு நினைக்கிறேன்.நூல் மோடி கையில்.!அதான்  அதிமுக பட்டம் உயர பறக்கிறது." என்றார் நண்பர்.
 


சனி, 10 பிப்ரவரி, 2018

மெல்ல தமிழ் இனி சாகுமா?

                    நான் தமிழனா?

                   தாயை வணங்கும் ஒவ்வொருவரும் தன்னைத் தாமே  கேட்டுக் கொள்ள வேண்டும்.

               அடி விழுந்தும் 'அம்மா' என வாய் திறக்கும் மானமுள்ள  தமிழர்கள் அனைவரும் சுயசோதனை செய்து கொள்ளுங்கள்.

              தாய், மனைவி ,சோதரி, அனைவரும் கண்ணகி வழி வந்திருக்கும் கற்புக்கரசிகள் என்பதை மறந்து விடாமல் மானமுள்ள தமிழர்களாக   வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

            வாக்குரிமையை காசுக்கு விற்கும்  தமிழர்களாக வாழ்ந்தது போதும்  சொந்த மண்ணை வந்தேறிகளுக்கு வாய்க்கரிசியாக போட்டு விட்டு  சொந்த மண்ணை இழந்து வாழ்கிற இழி நிலை இனியும் வேண்டாம். நமது  மொழி மீது   ஆதிக்க நச்சரவங்கள்  வாய் பதிக்க பார்க்கின்றன. மெது மெதுவாக இந்தி வருகிறது விளம்பரங்கள் வழியாக! அரசியல் கட்சிகள் சுயலாபம் கருதி வேடிக்கைப் பார்க்கின்றன. தார் கொண்டு  அழித்த போர்க்குணம் அற்றுப் போய் விட்டது. 

         கால் கழுவி தீர்த்தம் என பருகுவதற்கு சில கட்சிகள் தயாராகவே  இருப்பது இந்த மண்ணின் சாபக்கேடு.

          விமான நிலையங்களில் தமிழைத் தொலைத்து விட்டு சொரணை  அற்றுப்போய் இருக்கிறார்கள் அரசியல் தலைவர்கள்.

          கலைஞரின் ஓய்வு காலத்தை தமிழ்ப் பகைவர்கள் நன்றாகவே  பயன் படுத்துகிறார்கள். அவர் வழி வந்தவர்கள் யாருக்காகவோ அஞ்சி  தமிழ் பாதுகாப்பு என்பதிலிருந்து விலகி நிற்கிறார்கள்.

             அச்சமாக இருக்கிறது .

 குறள்.சிலம்பு ,முத்தொள்ளாயிரம், இன்னும் பல சொத்துகள் அழிந்து விடுமோ என்கிற அச்சம் வந்திருக்கிறது.

          மொழியை இழந்து விட்டு ஈனப்பிறவிகளாக எதிர்வரும் காலத்தில்  வாழவேண்டியது வருமா?   

                 

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

இளைய தளபதியும் சூப்பர் ஸ்டாரும்...!

அண்ணன் தம்பிகளாக பழகினாலும் தனக்கென ஒரு வழி அமையுமேயானால்  அந்த வழியில் பயணிப்பதற்கு யாருமே  தயங்க மாட்டார்கள்.

         அரசியலிலும் சரி, திரை உலகிலும் சரி, இதற்கு எத்தனையோ  எடுத்துக் காட்டுகள்.

         ஒரே தட்டில் சாப்பிட்டோம், இருவேறு  கருவறை என்றாலும் வளர்ந்தது, வாழ்ந்தது ஒரு தாய் மடியில்தான் என்றெல்லாம் பேசுவார்கள். கட்டித் தழுவிக்   கொள்வார்கள்.இத்தகைய பாசப்பிணைப்பில்தான் எல்லா  அரசியல்  இயக்கமும் வளர்ந்து பிரிந்து  வாழ்கின்றன.

        கலைஞர் ,மக்கள் திலகம், நடிகர் திலகம் ஆகியோர் அரசியல் கருத்துகளால் மோதிக்கொண்டாலும் ஒரே அன்னையின் கையினால்  உணவு  உண்டவர்கள்தான். உள்ளத்தில் சகோதரப் பாசம் ஊற்றெடுக்கும்.கொள்கை ரீதியாக மோதல் நிகழ்கிறபோது கிரகணம் பாசத்தை சற்றே  மறைத்து விடும்.வார்த்தைகளில் சூடு இருக்கும்.

          அத்தகைய பாசப்பிணைப்பு தற்போது அரசியலுக்கு வந்திருக்கிற - வரப்போகிற நடிகர்களுக்கு இல்லை.தொழில் வழியாக அவர்கள் சக கலைஞர்கள் மட்டுமே! அவர்களின் இலக்கு வெற்றி மட்டுமே!இது தவறுமில்லை.சம்பளம் கொடுக்கும் முதலாளியின் மகிழ்ச்சி,ரசிகர்களின் சந்தோசம் அவர்களுக்கு மிக மிக முக்கியம்.ரசிகர்கள்தான் நடிகர்களுக்கு வாழும் தெய்வம்.

       வெறும் கட்  அவுட்டுகளுக்கு பாலாபிகேஷம் செய்யும் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் தங்களது நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பு கிறார்கள்.இவர்களது ஆசைக்கு  முன்னோடிகள் எம்.ஜி.ஆர்., சிவாஜி ,என்.டி.ஆர்.

       படங்களில் நடிகர்கள் பேசும் வசனங்கள்தான் ரசிகர்களின் ஆசையை  தூண்டுகிறது என்று சொல்லலாம். தயாரிப்பாளர்கள் ,வசனகர்த்தாக்கள் ,பாடலாசிரியர்கள் ரசிகர்களின் தாகத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப  போதையை ஏற்றினார்கள் .இதில் ரஜினிக்கு முதலிடம் கொடுக்கலாம் .அவரது பாடல் வரிகளும் பேசிய வசனமும் அரசியல் தலைவர்களுக்கு அச்சத்தை கொடுத்தது. உண்மையிலேயே அவருக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்கிற ஆசை இருக்கவே செய்தது. அந்த ஆசையை ஆன்மீகப் போர்வையால் மறைத்துக் கொண்டிருந்தார் என சொல்லலாம்.தற்போது அந்த ஆசை பகிரங்கமாக வெளிவந்திருக்கிறது.

        சின்னஞ்சிறிசுகள் முதல் இளைஞர்கள் வரை  விஜய்யின் ரசிகர்களாக  இருக்கிறார்கள் என்பது விநியோகஸ்தர்கள் நம்பிக்கை. சம்பாதிக்கும் பணத்தை நற்பணிகளில் செலவிடும் விஜய் அரசியலில் இறங்கினால் அத்தனை தலைவர்களுக்குமே கடுமையான போட்டியாக இருக்கலாம். அவ்வளவு ஏன் ரஜினிக்கும் விஜய்தான் போட்டியாளர். இருவரது மக்கள் இயக்கங்களில் விஜய் மக்கள் இயக்கமே பலம் மிகுந்தது என்பது உளவுத்துறை கருத்து.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

இது சரிதானா மு.க.ஸ்டாலின் அவர்களே...!

              அறிஞர் என்றால் அவர் அண்ணா.
                பேராசிரியர் என்றால் அவர் அன்பழகன்.
               கலைஞர் என்றால் அவர் கருணாநிதி.
               நாவலர் என்றால் அவர் நெடுஞ்செழியன்.
               நாவுக்கரசர்  என்றால் அவர் மனோகரன்.
               சிந்தனைச்சிற்பி என்றால் அவர் சி.பி.சிற்றரசு.
              கவிஞர் என்றால் கண்ணதாசன்.
              புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.,
இப்படி திராவிட முன்னேற்றக்கழக தலைவர்களுக்கு முகவரி உண்டு. அந்த வகையில் தளபதி என அடையாளம் கண்டு கொள்ளப்பட்டவர் மு.க.ஸ்டாலின்
             கழகத் தலைவர் கலைஞர்
உடல் நலமின்றி இருப்பதால் செயல் தலைவராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.
            திமுக.வுக்கு புதிய பதவி.
            நாளை வேறு யாராவது தலைவராகி விட்டால் செயல்தலைவர் என்கிற பதவி இல்லாது போய்விடும்.முக்கியம் இழந்து விடும்.
          தற்போது ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடாமல் 'செயல் தலைவர்' என்றே  அழைக்க வேண்டும் என்கிற உத்திரவு வந்திருக்கிறது.
          புரியவில்லை.!
    அவரது பெயரை சொல்லக்கூடாது 'பதவியை' மட்டுமே குறிப்பிட வேண்டும்   என்கிற உத்தரவு ஜனநாயக வழியில் செல்லும் திமுகவில் எப்படி நியாயப்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை.
              ஜெயலலிதாவை 'அம்மா' என்றே அழைக்க வேண்டும் என்கிற வாய் வழி மிரட்டலைப் போல இல்லையா? இது சர்வாதிகாரம் என்றால் செயல் தலைவர் என்றே அழைக்கவேண்டும் என்கிற அதிகாரப்பூர்வ உத்தரவும் சர்வாதிகாரம் தானே?
         தளபதி என்று கழகத்தினர் பாசமுடன் அழைத்தார்கள்.இதைவிட 'செயல் தலைவர்' என சொல்வதால் பாசம் மிகுந்து விடுகிறதா?
        தெரியவில்லை.!
திமுக எதை நோக்கிப் பயணிக்கிறது?