செவ்வாய், 17 ஏப்ரல், 2018

'மேக் இன் இந்தியா'வா, ' ரேப் இன் இந்தியா'வா?--குஷ்பு.

கோபத்தின் உச்சியில் இருக்கிறார் குஷ்பு. 'சினிமா முரசம்' இணைய தளத்துக்காக பேட்டி காணச் சென்றிருந்த எனக்கு அவரின் சினம் ஏந்திய  முகத்தின் பலவித பாவங்களை பார்க்க நேர்ந்தது.

"ஆசிபா எட்டு வயது சிறுமி.அவளுக்கு போதை மருந்து புகட்டி மயக்க நிலையிலேயே வைத்து வேட்டையாடி இருக்கின்றன மனித மிருகங்கள்.ஒரு தாய் என்கிற நிலையில் என்னால் அழுவதை நிறுத்த முடியவில்லை" என  விம்மியவர் சற்று அமைதி காத்தார்.

"ஆசிபாவின் இனத்தைச் சேர்ந்த மக்களை அச்சுறுத்துவதற்காகவே , எங்களைத் தாண்டி நீங்கள் வாழ முடியாது என சொல்வதைப்போல வேட்டையாடி இருக்கிறார்கள்.அவர்களிடம் நீதி கேட்டு சென்றவர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேக் இன் இந்தியா என்கிறார் மோடி அவர்கள். ஆனால் 'ரேப் இன் இந்தியா'வாக மாறி இருக்கிறது. யாராவது பெண் எம்.பி.க்கள்  பார்லிமெண்டில் இதற்காக வெட்கப்பட்டிருப்பார்களா? வேதனைப் பட்டிருப்பார்களா? பிஜேபி எம்.எல்.ஏ.க்கள் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

மோடிக்கு ராகுல் காந்தியைப் பற்றி பேசுவதை தவிர வேறு வேலை இல்லை. இந்தியாவில் பிஜேபி ஆள்கிற மாநிலங்களில்தான்  கற்பழிப்புகள் அதிகமாக நடக்கின்றன. பிரதமர் மோடியோ உலகை வேடிக்கைப்பார்க்க வழக்கம் போல விமானத்தில் பறந்து விட்டார்" என  குமுறினார் குஷ்பு.