ஞாயிறு, 20 மே, 2018

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!


முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை.
"நீ நாசமா போவே!"
"பேதியிலே போவே!"
"கொள்ளைய்ள போவ!"
"காலரா கொண்டு போக!"
"தட்டுவாணி,தாலி அறுப்பா!"
"கொள்ளி வைக்க பிள்ளை இல்லாம பிளேக் கொண்டு போக!"
---இப்படி இன்னும் எழுதத் தகாத வார்த்தை வசீகரங்கள் வந்து விழும்.
ஆனால் இம்மாதிரியான சாபங்கள் பலித்திருக்குமேயானால் இந்தியாவின்  ஜனத்தொகை எப்போதோ குறைந்திருக்கும்.
என்றைக்கு மக்கள் மந்திரவாதிகளையும்,பில்லி சூனியம் வைக்கிற சாமியார்களையும் ஆட்சியில் உட்கார வைத்தார்களோ அன்றே நாட்டின் உச்சந்தலையில் ஏழரை இரும்புச்சேர் போட்டு உட்கார்ந்து விட்டான். இந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்!
யோகி ஆதித்யநாத் என்கிற சாமியாரை சி.எம்.ஆசனத்தில் அமரவைத்தார்   திருவாளர் மோடி.
அந்த சாமியாரின் அமைச்சரவையில் எத்தகைய அறிவாளிகள் இருப்பார்கள் என்பதை தெரிந்த கொள்ள முடியாதா?
"மக்களை நோய் நொடியில் இருந்து காப்பாற்றுகிற அறிவாளிதான் அமைச்சராக இருக்கவேண்டும் என்கிறது தமிழ்மறை.
ஒருவேளை வட இந்தியர்களுக்கான வேதத்தில் சாபமிடுவதுதான் மந்திரிக்கு  தகுதி என சொல்லி இருக்கிறதோ என்னவோ?
ஆதித்யநாத் மந்திரிசபையில் ஒரு மகாபுத்திசாலி ஒருவர் இருக்கிறார்.
அவரின் பெயர் ஒ.பி.ராஜ்பார்.
கையில் கமண்டலம் இல்லாத குறை.
"யாராவது எதிர்க்கட்சிகள் நடத்துகிற ஊர்வலம் பொதுக்கூட்டங்களுக்கு போனால் அவர்களுக்கு என்னுடைய அனுமதி வேண்டும்.இல்லையென்றால்  நாசமாகப் போவீர்கள்.எனது சாபம் பலிக்கும். அவர்களுக்கு மஞ்சள் காமாலை வரும்.என் கையால் மருந்து வாங்கினால்தான் குணம் ஆகும்" என்று பேசி இருக்கிறார்.
இப்படிப்பட்ட கோமாளிகளின் ஆட்சியில் நல்லாட்சி நடக்குமா?
இன்னொரு மந்திரி "இது தலைச்சன் பிள்ளை மண்டை ஓட்டில் தயாரித்த மை.தடவினால் ரத்தம் கக்கி சாவே.அதனால் பிஜேபிக்கு ஓட்டுப் போடு " என்று கிளம்பினால் என்ன ஆவது?
இதுதான் நவீன இந்தியாவா? கர்மம்.கர்மம்.!

சனி, 19 மே, 2018

தேடிப் பெற்ற தேசிய அவமானம் .அரசியல் கேடு!

" நாங்கள் சாகவோ.அழுது கொண்டிருப்போமோ,ஆண் பிள்ளைகள் நாங்கள் அல்லமோ? உயிர் வெல்லமோ? நாங்கள் நாய்களோ,பன்றிச்சேய்களோ ? நீங்கள் மட்டும் மனிதர்களோ? இது நீதமோ.பிடிவாதமோ?" என்று பரங்கியரைப் பார்த்துக் கேட்டான் பாரதி.

இன்று பாஜக என்கிற மதவெறி சக்தியைப் பார்த்து மக்கள் கேட்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்து மக்கள் எந்த கட்சிக்குமே தனித்த பெரும்பான்மையை  கொடுக்கவில்லை என்ன கோபமோ தெரியவில்லை!

ஆனால் 'நான் ஆட்சி அமைப்பேன்' என பாஜகவின் எடியூரப்பா  டெல்லி பிரதிநிதியான ஆளுநரிடம் சொல்வாராம். அவரும் அனுமதிப்பாராம்.

"அமைத்துக் கொள்.பத்து நாளில் பெரும்பான்மையை நிரூபி" என்று  ஆளுநர் சொன்னதில்  உள்நோக்கம் இருக்கிறதா, இல்லையா?

"இருப்பதே பத்து பேர். அவர்களை பதினைந்தாக காட்டு "என சொல்வது  ஆள் பிடிக்கும் அராஜகபோக்குக்கு ஆரத்தி எடுப்பதாகத்தானே அர்த்தம்?எத்தனை கோடிகள் கொடுத்தாவது மற்ற கட்சியிலிருந்து ஆட்களை இழுத்துக்கொள் என்கிற இழி செயலுக்கு ஆளுநர் மறைமுகமாக  ஆதரவாக இருந்தார் என சொல்லலாமா இல்லையா?  மைனாரிட்டியான ஆட்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்த பின்னரும் எந்த தர்மத்தின்படி பாரதமாதாவின் புதல்வர்களை ஆள்வதற்கு ஆளுநர்  அனுமதித்தார்.?

சில மணி நேர சி.எம் பதவிக்காக ஜனநாயகத்தை இப்படியா இழிவு படுத்துவது?

தேடிப்பெற்ற தேசிய அவமானம். அரசியல் கேடு எடியூரப்பா!

முறைகேடான அரசியலுக்கு இந்திய பிரதமர் துணை போனது கேவலமானது.
 முடிவில் என்ன ஆனது?

குதிரை பேரம் செய்ய முடியாமல் போனதால் கழன்று விழுந்த மூக்கை  எந்த கொம்பன் சரி செய்வான்?

கன்னட மாநிலத்தில்  கவுரவமாக எடியூரப்பாவினால் முகம் காட்ட முடியுமா?

பிஜேபியின் நாட்கள்  எண்ணப்படுகிறது?

தெற்கில் புக நினைத்தால் உடம்பெல்லாம் கரி பூசிக்கொள்ள வேண்டியதுதான்!



திங்கள், 14 மே, 2018

வெட்கக்கேடு ..குற்றவாளிக்கு அடைக்கலம் தருவது!

"தர்மம் என்றால் என்ன என்பது நமக்குத் தெரியாமல் போய் விட்டது. மற்றொரு முறை நாம் அடிமையானால் ஒழிய சுதந்திரத்தின் பெருமை நமக்குப் புரியாது" என்று சொன்ன கவியரசு கண்ணதாசனின் வரிகள் மூளையில் திரும்பத் திரும்ப பதிவாகியபடியே ஓடியது..
 அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
"தர்மத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதாக சொல்கிற" மத்திய பாஜக. அமைச்சர் பொன்னார் பழுத்த பக்திமான்.
நெற்றியில் திருநீறு.
புருவங்களுக்கு மத்தியில் குங்குமம்.
பொய் சொல்ல மாட்டார் ,அறம் , சிவம் இரண்டும் இரு விழிகள் என வாழ்கிறவர்.இவை எனது நம்பிக்கை.
இத்தகைய  பண்பாளர் நீதியை மிதிப்பாரா, அதுவும் அமைச்சர் பொறுப்பில் இருக்கிறவர் என எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஆனால் அத்தனையும் வீண்!
அவரும் வழக்கமான அரசியல்வாதிதான்! வேடம் போடுகிறார்.
ஏழு மலை .ஏழு கடல் தாண்டி  போலீசாரால் கண்டு பிடிக்க முடியாத  அருகில் அமர்ந்திருந்த தேடப்படும் குற்றவாளி எனப்படுகிற  எஸ்.வி.சேகரை   அருகில் இருந்த காவல் துறையிடம் ஒப்படைக்காமல் தப்பிக்கவிட்டதுதான்  அவரது தர்மமா?
அதற்காக பொன்னார் சொல்லுகிற காரணம் எல்லாம் சொத்தைகள்,அழுகிய  குப்பைகள்.!
இந்திய அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவேன் என்று  கீதையின் மீது சத்தியம் பண்ணியது எல்லாம் பொய்மைதானா?
பார்த்தாலே கும்பிடத் தோன்றுகிற ஒரு பெரியவர் செய்கிற காரியமா?
அய்யா ...நெற்றியில் பூசுகிற திருநூறு சுடவில்லையா?
குற்றவாளியென சொல்லப்படுகிற ஒருவருக்கு அடைக்கலம் கொடுப்பது வெட்கக்கேடு என சொல்லாமல் வேறென்ன சொல்வது?

ஞாயிறு, 6 மே, 2018

நரபலி வாங்கிய நீட் தேர்வு! நாசமாகட்டும் நய வஞ்சக அரசு!

அறம் பாடினால் அரசு அழியும்.
கற்புக்கரசி கண்ணீர் வடித்தால் கடவுளும் கதறுவான்!
ஆனால் சிறுமியை சிதைத்தவனை அரசுதானே காக்கிறது!
நாளுக்கொரு விதமாக கற்பழிப்பு செய்திகள்.!
மனைவியை கணவனே கற்பழிக்கிறான்.
காலியான மது பாட்டிலை பிறப்புறுப்பில் சொருகுகிறான்!
கம்பன் வந்து அறம் பாடினாலும் சரிக்கட்டி விடும் அரசு!
நீட் என்ற தேர்வுக்கு நீள் யாத்திரை!அதுவே
பலருக்கு மீள முடியாத பயணம்.!

விட்டால் பழநி படிக்கட்டில்
டாஸ்மாக் திறந்து விடும்' தடுமாறி அரசு'க்கு
தட்டிக்கேட்க துப்பில்லை!
கிணத்தடி நீருக்கே வழியில்லை
நிலத்தடி நீரை தேக்குவோம் என்பதைப்போல!.

காங்.கட்சியை காணாமல் ஆக்குவதற்கு
காவிரிதான் ஆயுதமா காவிக்கு?
காலித்தனமல்லவா!
மேலாண்மை வாரியம் கேட்டவர்கள்
ஆண்மை நீர்த்துப்போனார்கள்.!
'காங்.கட்சி தோற்றால்தான் காவிரியில்
தண்ணீர் என காவி சோழி உருட்டுகிறது.
வீரம் பேசிய நிழல் படப் போராளிகள்
போர்வைக்குள் பதுங்கிப்

போனார்கள்.
தமிழக அரசுக்கு தத்துப் போனவர்கள்தானே?
மானியம் வரும் வரை காத்திருப்பார்கள்.!

நரபலி வாங்கி விட்டது நீட்தேர்வு!
மோடியும் எடப்பாடியும் இணைந்து நடத்திய வேட்டைக்கு
இன்னும் எத்தனை பேர்  இரையோ?

தேர்வு எழுதும் மாணவிகளின் துப்பட்டா
காறித் துப்பட்டா என கேள்விகள் கேளாதா?

கம்மல் ஜிமிக்கி போட்டால் அரசுக்கு என்ன கேடு?
அவை கண்ணகியின் காற்சிலம்பு ஆக மாறும்
நாள் நாளையாகவும் இருக்கலாம்.!
மங்கலகரமாக போக வேண்டிய
மாணவிகளின் பூ, பொட்டு களையச்
சொன்னவர்களின் விரல்கள் குறுகிப் போய் அழுகும்!

சொல்ல கொதிக்குதடா நெஞ்சம்.!