செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

"நண்பர் ரஜினிக்கு அரசியல் அறிவு கம்மி!"- அமைச்சர் தாக்கு.

எத்தனை நாளைக்குத்தான் வலிக்காம இருக்கிறதா நடிப்பீங்கன்னுதான் அதிமுகவை பார்த்துக் கேட்கத் தோணுது. உச்ச நீதி மன்றமும் எத்தனை வாட்டிதான் குட்டும்? கொஞ்சம் கூட உறைக்காதா?

சென்னை மாநகராட்சியில் லஞ்சம் இல்லாம ஒரு காரியமும் நடக்காது என்று சொல்லி  ஒரு கூறிப்பிட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகளின்  சொத்து விவரங்களை கேட்கிறது உயர்நீதிமன்றம் !

 அரசும் அதிகார வர்க்கமும் வெட்கப்பட வேணாமா,வேதனைப்பட வேணாமா?

உயர் நீதிமன்ற உத்திரவுகள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகின்றன என்பது நீதிபதிகளுக்கு தெரியாதா?

இதை பத்தியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாம  ரஜினிகாந்தின் அரசியல் அறிவை அடிஸ்கேல் வச்சு அளந்து பார்க்கிறார் அமைச்சர் ஜெயகுமார்.

பல நேரங்களில் அமைச்சர்களின் ஸ்போக்ஸ்மேன் அண்ணாத்ததான்!

செல்லூரார்,திண்டுக்கல்லார்லாம் பெரும்பாலும்  வாயத் திறப்பதில்லை. திறந்தால் வெள்ளப் பெருக்க  தடுக்க விபரீத ஐடியாக்களை ஒருத்தர் கொடுப்பார். லால்பகதூர் சாஸ்திரியிடம் எடப்பாடியார் இப்பத்தான் பேசினார் என்பார் இன்னொருத்தர். .

 இப்படி பொது அறிவுக்களஞ்சியம் பொங்க ஆரம்பிச்சிடும்.

அந்தம்மா எப்படி இப்பேர்ப்பட்ட அறிவுக் கொழுந்துகளை செலக்ட் பண்ணினாங்க.? அது சரி இப்படிப்பட்ட ஆளுங்கதான பரமவிசுவாசிகளாக இருப்பாங்க..ஓ..சப்ஜெக்ட் மாறிப்போறேனோ?

 ரஜினி மேட்டருக்கு வருவோம்.. நேத்து திரை உலகத்தினர் நடத்திய கூட்டத்தில் பேசிய ரஜினி "கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் முதல்மந்திரி கலந்திருக்க வேணாமா? மொத்த மந்திரிசபையும் வந்திருக்க வேணாமா?  நீங்க என்ன எம்.ஜி.ஆரா இல்ல ஜெயலலிதாவா?ன்னு கேட்டுட்டார்.

அண்ணன் ஜெயகுமார் பொங்கிட்டார்.

"மறைந்த தலைவருக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் அரசியல் பேசக்கூடாது. ஆனால் எனதருமை நண்பர் அரசியல் பேசி இருக்கிறார். அனுபவம் போதாது.அரசியல் மச்சூரிட்டி இல்லை. பார்ட் டைம் அரசியல்வாதி. இனிமேதான் புல்டைம் அரசியல்வாதியாகனும்" என்பதாக பேசி இருக்கிறார்.

ரஜினிகாந்த் இவருக்கெல்லாமா பதில் சொல்லுவார்.? அவர் கமுக்கமாக இருக்கிறார்..இன்னும் என்னென்ன கூத்து நடக்கப்போகுதோ?

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

அழகிரிக்கு எதிராக அன்பழகன் போர்க்கொடி.

 ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை  இரண்டாக உடைத்து மறுபடியும் டில்லி மேலிடம் ஒட்டி வைத்த கதையைப் போல.....

திமுகவையும் உடைக்க முடியுமா?

அதை கலைஞரின் மகன் அழகிரியை வைத்தே பிளக்க முடியாதா?

முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் .

கலைஞரால் கழகத்தை விட்டு நீக்கப்பட்டவர்தான் மு.க.அழகிரி.

அவர் திமுகவில் இல்லை என்பதை அழகிரியே ஒப்புக் கொண்டிருக்கிறார்,

"தனது ஆதங்கத்தை கொட்டப்போவதாக "சொல்லியிருப்பதாலேயே  திமுக வானிலை மாறப்போவதில்லை. நீக்கப்பட்ட பின்னர் பலதடவை  திமுக தோல்வியுறும் என ஆருடம் சொன்னவர் மீது கழகத்தினர் எப்படி  அனுதாபம் கொள்ள முடியும்?

அண்ணா சமாதி அருகில் இடம் தரமுடியாது என அதிமுக  அரசு சொன்னபோது சற்றும் தாமதமின்றி சட்டத்தின் உதவியை நாடி மறுபுறம் கலைஞரின் இறுதிச் சடங்குகளுக்கான பணியைத் திறமையுடன் செய்து முடித்தவர் ஸ்டாலினே தவிர அழகிரி இல்லை. 

மூத்த மகன் என்கிற முறையில் அதிமுக அரசுடன் வாதிடவும் இல்லை.

அழகிரி மீண்டும் சேர்க்கப்படலாம் என்கிற செவி வழிச்செய்தி வந்த பிறகு, "ஆதங்கத்தை சொல்லப்போகிறேன்"என அழகிரி சொன்னபிறகு  பேராசிரியர் க.அன்பழகன்  வெளியிட்டுள்ள கருத்து கவனிக்கத்தக்கது. அவர்  திமுகவுக்கு மூத்த தலைவர்.அவரின் கருத்து கலைஞருக்கு நிகரானது. 

"கலைஞரால நீக்கப்பட்டவரை மீண்டும் திமுகவில் சேர்க்க முடியாது"

இவரைத் தவிர குடும்பத்தில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் அழகிரி இணைப்புக்கு எதிராகவே இருக்கிறார்கள். 

அழகிரியை பிஜேபி யின் உளவுத்துறை பையன் படுத்திக்கொள்ளுமா. 

அழகிரி நீங்கலாக சிலரை வழக்குகளைக் காட்டி இணங்க வைக்க முடியுமா?

அவசர நிலைக் காலத்தில் அடக்குமுறையினால் அழிக்கமுடியாத கழகம் திமுகழகம்.  

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

எல்லைக்காவலனை இழந்து விட்ட தமிழ்நாடு!

இயற்கை எனும் அழகியல் சில நேரங்களில் சீற்றம் அடைவது உண்டு. அது வல்லரக்கனாக மாறுவதற்கு தமிழ் நிலம்தான் கிடைத்ததா? 
தமிழுக்குத் தாத்தா இருந்தார். பாரதி இருந்தார்,பாவேந்தர் பாரதிதாசன் இருந்தார்,ஆனால் எல்லையைக் காக்க எவர் இருந்தார்?

திராவிட இயக்கங்கள் பிளவுண்டு கிடந்தாலும் மாற்றார் ஆதிக்கம் ஊடே   புகுந்திட அனுமதிக்கவில்லை. எல்லைக் காவலர்களாக அந்த பேரியக்கங்கள் இருந்தன. அவசரநிலை பிரகடனம் செய்து பார்த்தும் திமுகழகம் புரண்டு விடவில்லை. திராவிட இயக்கங்களின் துணையின்றி  தேசிய கட்சிகளால் கால் பதித்திட முடியவில்லை.  ஊழலில் ஊறி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஜெ.இருந்தது வரை  வடவர் ஆதிக்கம் புக முடியவில்லை. ஆனால்  அந்த அம்மையார் மாண்டதும் அந்த இயக்கம் மண் புழுக்களாக மாறிவிட்டது. காவிகளுக்கு பல்லக்கு தூக்கிகளாக மாறி விட்டது. எல்லை காக்கும் மாவீரனாக ,மண்டியிடா தமிழனாக இருந்தவர் கலைஞர்தான் .
இன்று அவரும் நம்மிடையே இல்லை.
இனி என்னாகுமோ என்னருமைத் தமிழ்நாடு!
வடவரின் சிக்னல் கிடைக்காததால் பேரறிஞர் அண்ணாவின் அருகில் ஆருயிர்த் தம்பி கலைஞர் உறங்கிட தமிழக அரசு மறுத்து இருக்கிறது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய, எம்.ஜி.ஆர். சமாதியில் இடம் கொடுத்தது எந்த சட்டம்? ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது பிரதமர் மோடிக்கு சம்மதம்தானா? ஜெ.மீது  எத்தனை வழக்குகள்,அவர் மாண்டதால்தானே குற்றச்சாட்டுகளும்  மரணித்து போயின.
இத்துணைக்கும் காரணம் பிஜேபி தலைமைதான்!