ஞாயிறு, 18 நவம்பர், 2018

சர்க்கார் படம் லாபமா நட்டமா ,யாருக்கு?

பெரிய படம் என்றால் வசூல் விவரங்களை யூகத்தின் அடிப்படையில்  ஊடகத்தில் எழுதுவது வழக்கம்தான்.!
படத்தை எடுத்தவர்கள் யாரும் அது நட்டம் என்றால் மட்டுமே வாயைத் திறப்பார்கள்.
படத்தில் நடித்தவர்களுக்கு ,துறை சார்ந்தோருக்கு ஒரு போதும் நட்டம் இருப்பதில்லை. 
சர்கார் படத்தின் ஆறு நாள் கலெக்ஷனை வைத்து துறை சார்ந்த ஒருவர் சொல்கிறார் விநியோகஸ்தர்களுக்கு 23 கோடி நட்டம்.
ஓடிக்கொண்டிருக்கும் 750 ஸ்கிரீன்களில் இன்று வரை லாபம் எதுவுமில்லை சென்னையைத் தவிர.! 
யாருக்கு லாபம்?
சன் 30 கோடி.!
வெளிநாடுகளுக்கு விற்ற வகையில் அருண்பாண்டியனுக்கு 10 கோடி லாபம்.
விஜய்.39 கோடி வரி உள்பட. முருகதாஸ் 20 கோடி.ரகுமான் நாலு கோடி, கீர்த்தி சுரேஷ் ஒரு கோடி என கணக்கு சொல்கிறார்!
இது உண்மையாக இருக்குமா?

சனி, 17 நவம்பர், 2018

ஆணவப் படுகொலையும் ஆர்ப்பாட்டங்களும்.!


என்னதான் சட்டங்கள் போட்டாலும் ,கண்டனங்கள் தெரிவித்தாலும் ,அந்த இடி மின்னல்களையே ஆயுதமாக்கி இறக்கினாலும்  ஆணவக் கொலைகள் மட்டும் குறைந்தபாடாக இல்லை.

கண்டனக்குரல்  வெற்றுக் கூச்சலாகிப் போகிறது.

சாதி வெறியை தரையில்  போட்டு ,நசுக்கி விடும் சக்தி கண்டனக்குரலுக்கும் இருப்பதில்லை.

வெறும் வெளிப்பாடுகளுக்கு சாதி வெறியும்  அடங்கிவிடாது.

நூறாண்டுகளுக்கும் மேலாக  வளர்க்கப்பட்டது  சாதி வெறி. இன்னமும் வளர்க்கப் படுகிறது. ஒழிக்கப்போவதாக சொல்லும் அரசியல் கட்சிகளும் மறைமுகமாக சாதியை வளர்ப்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் .
தேர்தலில் வேட்பாளர்களை சாதி பார்த்து ,தொகுதி  பார்த்து  நிறுத்தும் வழக்கம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.

சாதியை எதிர்த்து முழக்கமிடும்  தலைகள்,நடிகர்கள் உட்பட அனைவருமே தேர்தலில் சாதியைத்தான் நம்புகிறார்கள் .

இவர்கள்தானே  ஆணவக் கொலைகளை கண்டித்தும் குரல் எழுப்புகிறார்கள்.இவர்களைத்தானே மக்களும் நம்பி ஓட்டுப் போடுகிறார்கள்.

இந்த மக்கள்தான் ஆணவக் கொலைகளுக்கு காரணம். இவர்கள்தான் சாதியை வளர்க்கிறார்கள். காசுக்கு ஓட்டுப்போடும் இவர்களை நம்பித்தான் லஞ்சம் ,ஊழல் வாழ்கிறது.

எப்படிங்க சாதி ஒழியும்?

கன்னடருக்கு இருக்கும் இனப்பற்று தமிழர்க்கு இல்லையே!

பத்திரிகையாளன் என்கிற கடமையில் அண்மையில் பெங்களூருக்குச் சென்றிருந்தேன்.

கே.ஜி.எப் என்கிற திரைப்படத்துக்கான முன்னோட்ட விழா.

ரெயிலை விட்டு இறங்கியதும் என் கண்களில் பட்டது...

ரெயில் நிலையத்தின் உச்சியில் பறந்த கொடி.!

மஞ்சள்-குங்கும வண்ணத்திலானது.

மத்திய அரசின் ஆதிக்கத்தில் இருக்கிற ரயில்வே நிலையத்தின் உச்சியில் தேசியக் கொடி அல்லவா பறந்திருக்கவேண்டும்?

வித்தியாசமாக இருக்கிறதே என்கிற வியப்பு.

அருகில் நின்ற நண்பர் சக பத்திரிகையாளர்  தமிழன்பனிடம் கேட்டேன்,'இது என்ன கொடி,?'

"கன்னட நாட்டுக்கொடி! கன்னடர்களே  வடிவமைத்துக்  கொண்டிருக்கும் கொடி! அவர்களை அடையாளம் காட்டும் கொடி"

"அப்படியானால் நம்மை அடையாளம் காட்டுகிற கொடி இருக்கிறதா?"

"பழ.நெடுமாறன் அய்யா வைத்திருக்கிறார்"  என்றார் தமிழன்பன்.

 ஒன்றுபட்டு கொடியை வடிவமைத்துக் கொண்ட கன்னட சகோதரர்கள்தான் உயர்வாகத் தெரிகிறார்கள். ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்து தங்களுக்கென  தனிக் கொடி அமையப்பெற்றவர்கள் கன்னட சகோதரர்கள்தான்.

கன்னடக்கொடிக்கு ஆளுநர், முதல்வர் ,மரியாதை செலுத்துகிறார்கள்.அரசு விழாக்களில் மஞ்சள் சிவப்பு கொடிதான் பறக்கிறது.கன்னட அரசுக்கென தனிக் கொடி. காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா  பிஜேபி அரசுடன் போராடி பெற்ற கொடி .

தமிழக அரசினருக்கு இந்த உணர்வு எப்போது வரும்? இலவசங்களைக் கண்டித்து படம் எடுக்கிறவர்கள்  உண்மையான  தமிழ் உணர்வுடன் தமிழரின் அடையாளங்களை  மீட்டெடுக்கிற முயற்சிகளில் இறங்குவது எக்காலம்?