ஞாயிறு, 17 மார்ச், 2019

ரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டிய அழுத்தத்தைக் கொடுத்தது  வேறு யாருமல்ல பிரதமர் மோடிதான் என்கிறது அரசியல் வட்டாரம்.

ஆனால் சாமர்த்தியமாக  தனது என்ட்ரியை சட்டசபைத் தேர்தலுக்கு  ரஜினி தள்ளி வைத்திருப்பதற்கு  காரணமும் மோடிதான்!

பாராளுமன்றத்தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் கட்டாயம் ரஜினி களம் இறங்கியாக வேண்டும். இல்லையேல் தமிழத்தில் பிஜேபியின் கிளையாக ரஜினியின் புதிய கட்சி அமையவேண்டும். 

இதைத்தான் மோடியுடனான ரஜினியின் சந்திப்பில் பேசி இருக்கிறார்கள்.

"மன்றத்தினர் இனி ரசிகர்கள் இல்லை.அவர்கள் காவலர்கள்" என ரஜினி அறிவித்தது மோடியின் ஐடியாதான்.

அதைத்தான் மோடி இன்று சொல்லியிருக்கிறார்.தன்னை சவுக்கிதார் என்று சொல்லிக்கொள்வதன் காரணம் இப்போது புரிந்திருக்கும்.

இந்தியில் 'சவுக்கிதார்' என்றால் ஆங்கிலத்தில் 'வாட்ச்மேன் 'என அர்த்தம். தமிழில் 'காவலர்' என பொருள்.

ஆக ரஜினியின் 'காவலர்களும்,மோடியின் காவலர்களும் ஒரே அணியினர்தான் !

ஆக சாணக்கியம் எங்கிருக்கிறது?

மோடியிடம் இருக்கிறது.

திங்கள், 11 மார்ச், 2019

அமலாபாலின் அலைச்சறுக்கு

நடிக்கத்தான் வாய்ப்புகள் இல்ல.உல்லாசமாக விளையாடவாவது  செய்யலாமே என்கிற ஆசை இருக்கத்தானே செய்யும்?
அமலாபாலுக்கும் அத்தகைய ஆசை! கடந்த ஆண்டு இரண்டே படங்கள்.
தற்போது கையில் 'அதோ அந்த பறவை போல,' 'ஆடை'என இரு படங்கள்.
2017-ல் இயக்குநர் ஏஎல்.விஜய்யை காதலித்து மணந்து கொண்டவர்தான் இந்த அமலாபால். ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே கல்யாண வாழ்க்கை கசந்து விட்டது. விஜய்யின் குடும்பத்தின்  கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லையோ என்னவோ பிரிந்து விட்டார்.
அதன் பிறகு காடு கடல் நாய் என புகைப்படங்கள் எடுத்து தனது சோசியல் மீடியாவில் வெளியிடுவது வாடிக்கையானது..தற்போது அலைச்சறுக்கு விளையாட்டு படத்தை வெளியிட்டிருக்கிறார்.

நடிகை இரண்டாவது குழந்தை பெத்துக்கலாமா?

வயசென்னா முப்பத்திஎட்டா?
புள்ள பெத்துக்கக் கூடாதா...?
எவஞ்சொன்னான்?
கடவுள் போட்ட பார்டரே நாப்பது வயசுதானேய்யா.!அதான் வாரணம் ஆயிரம் ,அசல் பட நடிகை சமீரா ரெட்டி ரெண்டாம் தடவையா மசக்கையா இருக்கு.2014-கல்யாணம். அடுத்த வருசமே ஆம்பள புள்ள. இப்ப மறுபடியும் உண்டாகி இருக்கு. இது பொம்பள புள்ளயா இருக்கணும்னு ஆசையாம்.
நடத்தும்மா நல்லா ! 

ராகுல் காந்தியை டி.என்.எ சோதனை செய்ய சொல்கிறது பிஜேபி.


அரசியல் என்பதற்கு அநாகரீகம் என இன்னொரு பெயரும் சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால் அசிங்கம் என்பது தேர்தல் காலங்களில் சர்வ சாதாரணமாக நடக்ககூடியதுதான். நாலாந்தர அரசியல் வாதிகளினால் மட்டரகமாக அரசியல் தலைவர்கள் விமர்சிக்கப்படுவார்கள்.
காலம் காலமாக இருப்பதுதான்.!ஆளும் கட்சியின் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதால் முதல் அசிங்கம் அங்கிருந்துதான் வரத்தொடங்கும்.
அதற்கு பதில் சொல்கிறேன் என சொல்லி எதிர்க்கட்சிகளின் தரப்பில் இருந்து அடுத்த அசிங்கம் வீசப்படும்.
இப்படி இரு தரப்பினருமே அசிங்கங்களை அள்ளி பூசிக் கொள்வார்கள்.
இவர்களில் யாருக்கு முதல் பரிசு என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
அண்மையில் நிகழ்ந்த விமானப்படைத் தாக்குதலில் பாக் பயங்கரவாதிகள் 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என செய்திகள் வந்தன.
இதைப்பற்றி ராணுவ அதிகாரி ஒருவர் "இந்த எண்ணிக்கை பற்றி அரசுதான் சொல்லவேண்டும்.  இலக்கு சரியாக தாக்கப்பட்டதாஇல்லையா  என்பதைப் பற்றிதான் நாங்கள் சொல்லமுடியும்"என சொல்லிவிட்டார். 
ஆனால் பாகிஸ்தான் அரசு "எங்கள் வனப்பகுதியில் குண்டு வீசி மரங்களை நாசமாக்கிவிட்டார்கள்"என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.
இதை குறிப்பிட்டு மரணமடைந்த பயங்கரவாதிகளைப் பற்றிய விவரங்களை ராகுல் காந்தி  கேட்டிருக்கிறார்.அதாவது ஆதாரம் கேட்டிருந்தார்.
இப்படி கேட்டது சரியா இல்லையா என்பதை பிரதமர் மோடி விளக்குவதுதான் நியாயம்,நேர்மை.!
ஆனால் மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே என்பவர் கண்ணியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டார்.

"ராகுல் காந்தி ஒரு பிராமணர்தான் என்பதற்கான டி.என்.ஏ சர்டிபிகேட் காட்ட வேண்டும்."என்றதுடன் நில்லாமல் முஸ்லீம்-கிறித்தவ கலப்பு என சொன்னதுதான் ....ச்சே! 

"பரதேசி,பாரீனர் "என்றெல்லாம் சொன்னவர்தான் இந்த மாண்புமிகு மத்திய அமைச்சர். எனவே ஆனந்தகுமார் ஹெக்டேயின் தரம் எத்தகைய உயர்வானது என்பதையும் சிறிது கூட வருத்தப்படாத பி.ஜே.பி.யின் அரசியல் நாணயம் பற்றியும் அறிந்து கொள்ளவே இந்த பதிவு.!

சிந்திப்போமாக.

வியாழன், 7 மார்ச், 2019

தொண்டர்கள் திமுக அணி பக்கம்.! செயலாளர்கள் அதிமுக அணி பக்கம்.விஜயகாந்த் திண்டாட்டம்.

வைதேகியின் கண்களுக்கு  மாயமான் தெரிந்ததைப் போல இன்று திமுக அதிமுக கட்சிகளுக்கு தெரிகிற மாயமான்தான் தேமுதிக,.
கேப்டன் என்கிற ஒற்றை மனிதனின் கடுமையான உழைப்பில் உருவான இயக்கம்தான் தேமுதிக. 
அவரது மன்றத்தினரை கட்டுக்கோப்பான ராணுவமாக வளர்த்த பெருமை விஜயகாந்த் ஒருவருக்கு மட்டுமே உரியது. அவரது உழைப்பின் பலனை அரசியலில் அனுபவிக்க இன்று யார் யாரோ வருகிறார்கள். 
தேர்தலில் சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவதற்கு அங்கே சிறந்த அரசியல் ஆலோசகர்கள் இல்லாமல் போய் விட்டார்கள்.
ஒரே நேரத்தில் எதிரெதிர் அணியினரிடம் பேசுகிற அளவுக்கு தேமுதிகவின் நாகரீகம் இருக்கிறது.
"துரை.முருகன் திமுகவைப் பற்றி என்னிடம் பேசியதைச் சொன்னால் அசிங்கமாகிவிடும்"என்கிறார் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். 
"துரை.முருகனிடம் தேமுதிகவை சேர்ந்த அனகை முருகேசன்,இளங்கோவன் இருவரும் பெர்சனலாகத்தான் பேசி இருக்கிறார்கள்.கட்சி தொடர்பாக பேசவில்லை"என அழுத்தம் கொடுத்து சுதீஷ் பேசியதை பக்கத்தில் இருந்த முருகேசன், இளங்கோவன் இருவரும் மறுக்கவில்லை.
அவர்களும் அதையே சொன்னார்கள்.
ஆனால் துரை முருகனோ"என்னிடம் பெர்சனலாகப் பேசுவதற்கு எத்தகைய முகாந்திரமும் இல்லை.அவர்களை முன்னும் பின்னும் பார்த்ததில்லை என்கிறார். இதுமட்டுமல்ல "தேமுதிக தொண்டர்கள் திமுக கூட்டணியைத்தான் விரும்புகிறார்கள். மாவட்ட செயலாளர்கள் அதிமுக கூட்டணியை விரும்புகிறார்கள்" என்று அவர்கள் சொன்னதாகவும் துரை முருகன் சொல்கிறார்.
ஆக தொண்டர்கள் பக்கம் தேமுதிகவின் செயலாளர்கள் இல்லை. அவர்கள்  பணபலம் மிகுந்த அணியை விரும்புவதில் ஆச்சரியம் இல்லைதான்.! ஆனால் முடிவு எடுக்கமுடியாமல் திணறுவது ஏன்?
பாமகவை விட குறைந்த எண்ணிக்கையை தேமுதிக பெறுவதற்கு தயார்தான் ஆனால் வேறு வகையில் காம்பரமைஸ் பண்ணுவதில் அவர்களுக்கு பிரச்னை என்பது புரிகிறது.
அது கேபினட் பெர்த் ஆக இருக்கலாமா?

செவ்வாய், 5 மார்ச், 2019

தேமுதிக வுக்கு மத்தியில் 2 கேபினட் வேண்டுமாம்.!

சென்னையில் ஏதாவது ஒரு வீதியில் ஜனக்கூட்டம். ஆளும் கட்சியினரும் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் இரண்டாயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்தது மாதிரி அரசாங்கமே 2000 ரூபாய் கொடுப்பதற்காக விண்ணப்ப படிவம் கொடுக்கிறது அரசாங்கம்.!
"மாதா மாதம் ரெண்டாயிரம் கொடுக்கப் போறாங்களாம்" என சில அப்பாவி மக்கள் பேசிக்கொள்வதையும் கேட்க முடிந்தது. ஏதோ ஒரு அடிப்படையில் காசு வந்தால் சரி என்கிற கரப்ட் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வந்திருக்கிறது அரசாங்கம்.
இந்த நிதி வழங்கல் தேர்தலுக்காகத் தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாதனைகளை சொல்ல முடியவில்லை.தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை.லஞ்சம் தவிர்க்கப்படவில்லை.ஆகவே மக்களையும் கெடுத்து விடலாம் என்கிற நோக்கம்தான் அரசுகளுக்கு இருக்கிறது. ஏற்கனவே ஓட்டுக்கு காசு வாங்கிப் பழக்கப்பட்டவர்கள்தான் மக்கள்.அவர்களுக்கு இது சட்ட வழியான பாதுகாப்பு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
வரப்போகிற நாடாளுமன்றத்தேர்தலில் கூட்டணிக்காக கட்சிகளிடையே நடக்கிற பேச்சு வார்த்தையில் கோடிகளையும் மையமாக வைத்துதான் பேசுகிறார்களாம்.
"இத்தனை 'சி' இத்தனை சீட் " என்கிற அடிப்படையில் பேசுவதாக அதிமுக மீது குற்றம் சாற்றுகிறார்கள்.
இன்னும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. முக்கிய கட்சிகளான அதிமுக -திமுக இரு கட்சிகளும் பிரசார வியூகம் வகுத்து விட்டன.
ஆனால் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினியை பிரசார களத்தில் பிஜேபி இறக்கி விடுமா? அல்லது தொலைக்காட்சி வழியாக முன்னர் பேசியதைப் போல பேச வைப்பார்களா?
சாத்தியம் இருக்கா?
சத்தியமாக இல்லை என்கிறது ரஜினி வட்டாரம்.
இதைப்போல நாற்பது தொகுதிகளிலும் உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை  என்பதாகவும் சொல்கிறார்கள்.
தேமுதிக வுக்கு கூட்டணிதான் நல்ல வழி. இதை மறுத்து தனித்து நின்றால் தோல்வியைத்தான் சந்திக்க வேண்டும் என்கிறார்கள்.
கேப்டன் விஜயகாந்தினால் முன்னைப் போல உடலை வருத்திக்கொண்டு தேர்தல் சுற்றுப் பயணம் செய்ய முடியாது. பேசவும் முடியாது என்கிறார்கள். அவருக்குத் தேவை நல்ல ஓய்வு என்கிறார்கள் .
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் பல நிபந்தனைகளை விதித்து இருப்பதாக சொல்கிறார்கள்.
1.மத்தியில் இரு கேபினட் பதவி.ஐந்து எம்.பி.க்கள்.
2.வழக்கு நிலுவையில் இருக்கிற 21 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் எட்டு தொகுதிகள் எங்களுக்கு கொடுக்க வேண்டும்.
3.மே மாதம் நடக்க இருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் 30 சதவிகிதம் எங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
4.இரண்டு மேயர்கள் எங்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை பிஜேபி வழியாக அதிமுகவுக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம்.