வியாழன், 7 மே, 2020

என்னருமைக் காதலியே ...உன்னருகில் என்றும் நான்!


"உனக்கு கடமை பெரிது..சரி! அவளுக்கு?
உன்னை நினைத்து நித்தமும் ஏங்கிக்கொண்டு இருக்கிறாளே அவளுக்கு?
இடை மெலிந்து போனாளே !அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறாய்? சொல்!
கண்ணே மணியே என காதோரம் காதல் பேசி கட்டியணைத்து மெத்தையில் வித்தையைக் காட்டினாயே! இப்போது கையில் வேல் எடுத்துக் கொண்டு நீ சென்று விட்டால் அந்த வேல்விழியாள் என்ன ஆவாள்?"
இப்படியெல்லாம் தோழி  சொன்னதை கை வேல் நழுவாமல் கேட்டுக்கொண்டிருந்தான் வீரன்.
அவனுக்கு காடு கடந்து செல்லும் பணி காத்திருந்தது.!
கடமையா...காதலா ...காதலியா?
"நான் காட்டு வழி  கடந்து சென்றுவிட்டால் என்னுயிர்க்காதலி இறந்துவிடுவாள் என்றல்லவா இவள் கூறுகிறாள்.அவளை இழந்தபின் யாருக்காக நான் வாழவேண்டும்?"
நினைத்துப்பார்க்கிறான்..
சூடியிருந்த மலர்கள் மார்பினில் கசங்கிய போதும் "உடல் விலகாதிருங்கள் ,"எனக்கூறி இறுக அணைத்துக் கொண்டு வியர்வையில் சங்கமம் ஆனவள் இறப்பதா ,அவளை நான் மறப்பதா ,முடியாது."என்கிற முடிவுக்கு வருகிறான்.
"இடைமுலைக் கோதை குழைய முயங்கும் ,
முறைநாள் கழிதல்  உரு அமைக் காண்டை  
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை"
"இளமை என்றுமே உன்னுடனேயே தங்கிவிடுவது இல்லை.சுகிக்கும் உணர்வு நாள் செல்லச்செல்ல குறைந்து கொண்டே போய்விடும்.மனைவியை ஆரத்தழுவி இன்புறும் நாளும் கரைந்து விடும். ஆகவே அந்த நாட்களை வீணடிக்காதே வீரனே? என சொல்வது போலில்லையா ?கலித்தொகையை இன்று புரட்டியபோது இளமையின் பெருமையை அறிந்து கொண்டேன்..